அரசியலில் தாம் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு நேற்று (02) வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
43 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், இந்நிலைமையினால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று தனது எதிர்கால வாழ்க்கையை நடத்தவுள்ளதாகவும் மகிந்த யாப்பா கூறியுள்ளார்.
மேலும், தாம் இதுவரை எந்தவொரு தேர்தலிலும் தோற்கடிக்கப்படவில்லை எனவும் மகிந்த யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“கடந்த ஜனாதிபதி தேர்தலில் தெற்கிலே மக்கள் மத்தியில் குறிப்பாக சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியிலே அரசியல் மாற்றம் ஒன்றின் தேவை உணரப்பட்டது. அதன் விளைவுதான் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகியமையாகும்.
என்னுடையதும், ஏனைய சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களதும் போட்டியிடாதிருக்கின்ற முடிவு ஏனையவர்களும் உணர்ந்து முடிவெடுக்க உந்துதலாக அமையும் என கருதுகின்றேன்.
வன்னி மாவட்டத்தில் அரசியல் தெளிவுள்ள, ஆளுமைமிக்க இளம் தலைவர்களை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் என்ற மக்களின், இளைஞர்களின் விருப்பங்கள் நிறைவேற மக்கள் மனதறிந்து எதிர்வரும் நாடாமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.