அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கபடிப்போட்டியில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்தி கலந்துகொண்ட மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/ககு/கோரகல்லிமடு ரமண மஹரிஷி வித்தியாலய 17 வயதுப் பெண்கள் அணியினர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
27 பாடசாலை அணிகள் பங்குபற்றிய இந்த போட்டியின் இறுதி சுற்றுக்கு போதி மல்லவே எம்பிலி பிட்டிய பாடசாலையும், மட்டக்களப்பு கோரகல்லிமடு ரமண மஹரிஷி வித்தியாலயமும் தகுதி பெற்றிருந்தது.
கேகாலை எம்பிலி பிட்டிய பாடசாலையின் உள்ளக விளையாட்டரங்கில் இந்த போட்டியின் இறுதி சுற்று நேற்று (07) நடைபெற்றதுடன், போதி மல்லவே எம்பிலி பிட்டிய பாடசாலை 25 புள்ளிகளும், மட்டக்களப்பு கோரகல்லிமடு ரமண மஹரிஷி வித்தியாலயம் 31 புள்ளிகளும் என 06 புள்ளிகள் வித்தியாசத்தில் குறித்த பாடசாலை முதலிடம் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து கொடுத்துள்ளனர்.
அதேசமயம் இந்த மகத்தான வெற்றியை பெற்று கோரகல்லிமடு ரமண மஹரிஷி வித்தியாலயத்தின் பெயரை ஓங்கி ஒலிக்கச் செய்த கபடி வீராங்கனைகளையும், வெற்றிக்காக அற்பணிப்புடன் செயற்பட்ட பாடசாலை அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்களையும், அத்தோடு பிரபல கபடி வீரரும் விளையாட்டுப் பயிற்றுபிப்பாளருமான திரு. மதன் சிங் மற்றும் அவரோடு தொடர்சியாக பயிற்சிகளை வழங்கிய செல்வி கோகலிகா மற்றும் பூரண ஒத்துழைப்புகளை வழங்கிய கணேஸ் விளையாட்டு கழகம் உள்ளிட்டோருக்கு வித்தியாலய கல்விச் சமூகமும், கிராம மக்களும் தனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.