கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அவர்களது போலி வேஷங்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தேசியம் தேசியம் என்று கதைத்து இவ்வளவு காலமும் எமது மக்களை ஏமாற்றியுள்ளார்கள் என பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக முன்னனி கட்சியில் போட்டியிடும் முன்னாள் மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
இன்று (09) இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திபொன்று தேவபுரம், முறக்கொட்டான்சேனையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வருகின்ற அரசாங்கங்களில் இலஞ்சங்களை வாங்கி இன்று மக்களை ஏமாற்றியுள்ளார்கள்.இதனை கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்பு மக்களுக்கு வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. கடந்த காலத்தில் நான் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தாலும் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட வேண்டிய ஏற்பட்டிருக்கின்றது.
காரணம் அங்கிருந்த அமைச்சர்கள் இருவர் விட்ட தவறுகள் காரணமாக இப்போது அங்கு ஒரு சரியானதொரு தலைமைத்துவம் தேவையென கருதுகிறார்கள். இதன் காரணமாக குறித்த மக்கள் என்னை அழைத்துள்ளார்கள் எனவே அதன்படி இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறேன்.
மட்டக்களப்பில் போட்டியிட்டாலும் நான் அம்பாறை மாவட்ட மக்களை மறந்து விடவில்லை. அங்கும் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இலங்கை பூராகவும் எமது கட்சி போட்டியிடுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
அதேசமயம் நாட்டில் ஊழல் ஒழிப்புக்கு தமது ஆதரவை தெரிவித்து, ஜனாதிபதி தேர்தலின் போது அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவாக செயற்பட்டேன் எனவும் கூறிய அவர், முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாகவும் தேர்தலில் இறங்கியுள்ளதாகவும், அவர்கள் தன்னுடன் வந்து இணைந்து செய்படுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.