அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு பகுதியில் தனது காதலியை கடத்திச்சென்று உயிருடன் புதைத்து கொலை செய்த குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அடிலெய்டு நகரின் வடக்கு பிளம்டன் பகுதியில் முதியோர் காப்பகம் ஒன்றில் பணியாற்றி வந்த 21 வயதுடைய ஜாஸ்மீன் கவுர் என்ற யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முன்னாள் காதலனால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என யுவதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பெப்ரவரி 9 ஆம் திகதி 21 வயதான தாரிஜ்கோட் சிங் என்பரை எச்சரித்து விடுவித்துள்ளனர்.
இந்த நிலையில் முதியோர் காப்பகத்தில் இருந்து சந்தேகநபர் யுவதியை கடத்தி கை, கால்களை கட்டி இரவு உயிருடன் புதைத்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் முன்னெடு்த்த தீவிர விசாரணையில் யுவதி கைகள் கட்டப்பட்டு, கண்கள் மூடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், தனது காதலை முறித்துக்கொண்டமையினால் யுவதியை கொலை செய்ததாக நீதிமன்ற விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், மருத்துவ சோதனையில் யுவதி உயிருடன் புதைக்கப்பட்டமையினால், சுவாசத்தில் மண் கலந்து மூச்சுக்குழாயை அடைத்து உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.