மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் கடந்த 5 வருடங்களாக இடம்பெற்றுள்ள 58 இலட்சத்து 5 ஆயிரத்து 853 ரூபா நிதி மோசடி தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட விசேட நிதி மோசடி விசாரணைப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த கூட்டுறவு சங்கத்தின் புதிய நிர்வாகம் 2024ஆம் ஆண்டு பொறுப்பேற்றதையடுத்து நிதி தொடர்பாக ஆராய்ந்தபோது நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டது. அப்போது சங்கத்தின் பொருளாராக இருந்தவருக்கு எதிராக மாவட்ட விசேட நிதி மோசடி விசாரணைப் பிரிவு பொலிஸாருக்கு முறைப்பாடு செய்ததையடுத்து இந்த மோசடி தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது இந்த சிக்கன நலன்புரி சங்கத்தில் வைத்தியசாலையில் கடமையாற்றும் சுமார் ஆயிரம் பேருக்கு அதிகமானோர் உறுப்பினர்களாக இருப்பதுடன் மாதாந்தம் சம்பளத்தில் ஆயிரம் ரூபாவை சந்தா பணமாக செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் ஒருவர் (அற்றன்டன்) கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் பொருளாளராக பொறுப்பேற்று 2019 தொடக்கம் 2023 வரையான காலப்பகுதிவரை கடமையாற்றி வந்துள்ளதுடன், சங்க நிர்வாகத்தில் கடமையாற்ற வைத்தியசாலையை விட்டு வெளியாள் பெண் ஒருவர் மாதாந்த சம்பளத்துக்கு கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
இதன்போது பொருளாளர் சங்கத்தின் உறுப்பினர் பலரின் பெயரில் அவர்களுக்கு தெரியாமல் கடன் விண்ணப்பங்களை பூர்த்திசெய்து கடன் பெற்று பணத்தை மோசடி செய்து வந்துள்ளார்.
இவ்வாறு பொருளாளர் அவரது உதவிக்கு நியமித்த பெண் ஆகியோர் கடந்த 5 வருடத்தில் 58 இலட்சத்து 5 ஆயிரத்து 853 ரூபா நிதியை மோசடி செய்துள்ளது என மாவட்ட விசேட நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட பல விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மோசடியில் ஈடுபட்ட சங்கத்தின் முன்னாள் பொருளாளர் மோசடி செய்த பணத்தில் 39 இலட்சம் ரூபா பணத்தை திரும்ப ஒப்படைத்துள்ளதுடன், அவருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட அங்கு கடமையாற்றிவந்த பெண் 19 இலட்சம் ரூபாவை இதுவரை ஒப்படைக்கவில்லை.
இருந்தபோதும் இந்த பாரிய நிதி மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருவதுடன், இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை கைதுசெய்து இவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை வைத்தியசாலையில் இயங்கிவரும் இன்னொரு கூட்டுறவு சங்கத்தில் கோடிக்கணக்கான பண மோசடி இடம்பெற்றுள்ளதாகவும், கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் பொருளாளராக இருந்து மோசடி செய்தவர் அந்த சங்கத்தில் இருந்துள்ளதாகவும், சங்க யாப்பின்படி கடந்த யூலை மாதம் சங்க பொதுக் கூட்டம் கூட்டப்படவேண்டியது இன்னமும் கூட்டாமல் இருப்பதாகவும் சங்க உறுப்பினர்கள் அச்சம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.மட்டு கல்லடி பகுதியில் வைத்து இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் உள்நாட்டு இறைவரி தினைக்கள அதிகாரி கைது
மட்டக்களப்பில் காணி தொடர்பாக இரண்டு இலச்சம் ரூபா இலஞ்சம் வாங்கிய உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (15) கல்லடி பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.