பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது செலவு மற்றும் வருமானப் பதிவேடுகளைப் பேணுவதற்கு தனி நபரை நியமிப்பது பொருத்தமானது என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அவ்வாறு நியமிக்காத பட்சத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை வழங்குவதில் சில வேட்பாளர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களை இந்த வேட்பாளர்களும் எதிர்கொள்ள நேரிடும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் காலத்தில் முறையான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை வழங்காத வேட்பாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகள் குறித்து ஜனநாயகம், சீர்திருத்தம் மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“எந்த விதத்திலாவது ஒரு வேட்பாளர் தனது செலவு அறிக்கையை வழங்க முடியாவிட்டால், அல்லது அவர் தவறான தகவல்களை உள்ளிடினால், அவர் நீதித்துறை செயல்முறை மூலம் 3 ஆண்டுகளுக்கு தனது அரசியல் உரிமைகளை இழக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொதுத் தேர்தல் தொடர்பாக இதுவரை 257 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெறப்பட்ட முறைப்பாடுகள் அனைத்தும் சட்டத்தை மீறியவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், 181 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், மேலும் 76 முறைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.