மட்டக்களப்பில் கடந்த காலத்தில் அமைச்சர்களாக இருந்து இலஞ்சம், கொலைகள், ஊழல் மோசடி உட்பட பலவிதமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளவர்கள் எப்போது, எந்த நேரமும் கைது செய்யப்படுவார்கள் என்ற சூழல் உள்ளது எனவே மக்கள் வாக்களிக்கும் போது சிந்திக்க வேண்டும் என சுயேச்சைக்குழு 2 இலக்கத்தில் முந்திரிகைப்பழம் சின்னத்தில் தலைமை வேட்பாளராக போட்டியிடும் வடகிழக்கு முன்னேற்ற கழக தலைவரும் சமூக செயற்பட்டாளருமான வி.லவக்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கிரானிலுள்ள அவரது வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சுயேச்சைக்குழு 2 மாற்றத்தை நோக்கிய பயணத்தில் மாவட்டத்தில், சமூகத்தில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்ற ரீதியில் செயற்படுகின்றோம். இருந்தபோதும் ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்தை எடுத்து அது தமிழருக்கு உரிய பொதுவான சின்னமாக அறிவித்து அந்த சின்னத்தில் கடந்த காலத்தில் பொது வேட்பாளரை நிறுத்தி போட்டியிட்டனர்.
இதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தல் அறிவித்த பின்னர் குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிட்டவர்கள் குத்துவிளக்கை புறம்தள்ளி சங்கு சின்னத்தை எடுத்து போட்டியிடுகின்றனர் ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்துக்கு அதிகபடியான வாக்குகள் வீழ்ந்தபடியால் அந்த வாக்குககளை கபடகரமாக பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற நோக்கோடு இந்த சின்னத்தை எடுத்துள்ளனர்.
அவ்வாறே கடந்தகாலத்தில் இலஞ்சம் கொலைகள், ஊழல் மோசடிகள் உட்பட பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட அமைச்சர்கள் எந்தவேளையிலும் கைது செய்யப்படுவார்கள். எனவே இதனை மக்கள் சிந்திக்கவேண்டும் நாங்கள் தமிழ் உணர்வோடு தமிழர்களாக தமிழ் தேசிய நிலப்பரப்பிலே இன்றும் மக்களோடு மக்களாக நின்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
நாங்கள் ஒரு அரசியல் கட்சி சார்ந்தவர்களாக இருக்கவில்லை இருந்தபோதும் சுயேச்சைக் குழுவாக போட்டியிட நாங்கள் எடுத்து முடிவல்ல பிரதேச மக்கள் இளைஞர்கள், கிராம மக்கள் நீங்கள் உரிமைக்காக போராடுகின்ற போது நீங்கள் எங்களுக்காக வரவேண்டும் என மக்கள் எடுத்த முடிவு.
இதனடிப்படையில் மாவட்டத்திலுள்ள மக்களின் கல்வி வளத்தை மேம்படுத்துவது எமது நோக்கம் அத்துடன் மிகவும் கஸ்டமான சூழ்நிலையில் பல்கலைகழக படிப்பை மேற்கொள்ளமுடியாத உள்ள பிள்ளைகளின் மேற்படிப்புக்கான நிதி உதவிகளை செய்து கொடுப்பது, மக்களின் அடிப்படை சுகாதார வசதியான மலசல கூடம் இல்லாத மக்களுக்கு தமிழ் உறவுகளுக்கு இவற்றை எல்லாம் அமைத்துக் கொடுப்போம்.
அதேவேளை எங்கள் சுயேச்சைக்குழுவில் பட்டிருப்பு தொகுதியில் போட்டியிடுகின்ற வெல்லாவெளியைச் சேர்ந்த வேட்பாளரை அரச புலனாய்வாளர்கள் அழைத்து விசாரித்துள்ளனர். நாங்கள் ஜனநாயக வழியில் உரிமைகளுக்காக போகின்ற போதும் அரச புலனாய்வாளர்கள் விசாரணை நடாத்திக் கொண்டிருக்கின்றனர்.
அதேவேளை குத்துவிளக்கில் இருந்தவர்கள் சங்கு என முகங்களை மாற்றிக் கொண்டு வருகின்றனர். எனவே அவதானமாக செயற்பட்டு உண்மையாக வருகின்ற சுயேச்சைக்குழுவாகிய 2 இலக்கத்தில் முந்திரிகைபழ சின்னமான எங்களுக்கு வாக்களியுங்கள் மாற்றத்தை கொண்டுவருவோம் என்றார்.