வீட்டுத் தோட்ட பயிர் செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக அரச விவசாய உத்தியோகஸ்த்தர்களுக்கும், பயிர் செய்கையாளருக்குமான கலந்துரையாடல் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட விவசாய பயிற்சி திணைக்களம் சத்துருகொண்டானில் நடைபெற்றது.
இவ் நிகழ்வானது விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் அனுசரணையில் டயக்கோனியா நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது வீட்டுத்தோட்டப் பயிர் செய்கையாளர்கள் எவ்வாறு தங்களது பயிர் செய்கை நடவடிக்கைக்காக சேதனப் பசளைகளை பயன்படுத்துவது, நோய் தாக்கத்தில் இருந்து பயிர்களை பாதுகாப்பது என்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் பயிர் செய்கையாளர்கள் தாங்கள் வழமையாக எதிர்நோக்கும் பயிர் செய்கை தொடர்பான சந்தேகங்களை இக் கலந்துரையாடல் மூலம் தீர்த்துக் கொள்ளக் கூடியதாக அமைந்தது. வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட தடடுமுனை, குஞ்சங்குளம் மற்றும் கல்லரிப்பு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த வீட்டுத் தோட்ட பயிர்செய்கையாளர்கள் இவ் கலந்துரையாடல் நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் விவசாய பிரதிப்பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன் வளவாளராக கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். மேற்குறித்த கிராமங்களில் சேதனப் பசளை பயன்படுத்தி வீட்டுத் தோட்ட விவசாயத்தினை ஊக்குவித்து அவர்களது வாழ்க்கைதரத்தை வளப்படுத்தும் முகமாக 2024 ஜீலை மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை குறித்த திட்டத்தினை விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் பிரதேசதில் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.