பாரம்பரியமான அரசியல்வாதிகளை போன்றே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செயற்படுகிறார். குண்டுத்தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி மீறியுள்ளார் என தொழிலதிபரும், பொதுத்தேர்தல் வேட்பாளருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள மவ்பிம ஜனதா கட்சி காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பிரச்சார மேடைகளில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகளை அப்போதைய ஜனாதிபதி மறைத்து வைத்திருப்பதாக குறிப்பிட்டார். அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானால் அந்த அறிக்கைகளை அவர் வெளியிடுவார் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானதன் பின்னர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற அறிக்கைகளை பகிரங்கப்படுத்துமாறு உதய கம்மன்பில ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.
குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான இரண்டு அறிக்கைகளை ஜனாதிபதி வெளியிடாத காரணத்தால் உதய கம்மன்பில வெளியிட்டார். இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து ஆராய்வதை விடுத்து விடயங்களை பகிரங்கப்படுத்திய நபருக்கு எதிராக செயற்படுவது முறையற்றது.
பாரம்பரியமான அரசியல்வாதிகளை போன்றே ஜனாதிபதி செயற்படுகிறார். தேர்தல் பிரச்சார மேடைகளில் மக்களுக்கு குறிப்பிட்ட விடயத்தை தற்போது மறந்து விட்டார். மக்களை ஏமாற்றியுள்ளார். ஜனாதிபதியின் முறையற்ற செயற்பாடுகளை எதிர்க்கும் பலமான எதிர்க்கட்சித் தோற்றம் பெற வேண்டும்.
இடம்பெறவுள்ள பொதுத்தேர்தல் தீர்மானமிக்கது. பலமான எதிர்க்கட்சியாக செயற்படும் தகைமை எமது அணிக்கே உண்டு. ஆகவே எதிர்க்கட்சி பதவியை மக்கள் எமக்கு வழங்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறோம் என்றார்.