நாட்டில் தற்போது குழந்தைகளிடையே தட்டம்மை நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த நோய்தொற்று தொடர்பில் இன்றையதினம்(11.07.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா இதனைத் தெரிவிதுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நேற்றைய நிலவரப்படி 12 சிறுவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சல் மற்றும் சிவப்பு புள்ளிகள் இந்த நோயின் அறிகுறிகளில் ஆகும். இந்த நோயின் ஆபத்துகள் குறித்து தற்போதுவரை மக்கள் சரியாக அறிந்திருக்கவில்லை.
இதேவேளை, கடந்த சில வருடங்களில் சிறுவர்களுக்கு புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றது.
ஒவ்வொரு வருடமும் 19 வயதுக்குட்பட்ட 900க்கும் அதிகமான சிறுவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, ஆண்டுதோறும் சுமார் 100 குழந்தைகள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுள்ளனர்.
இவ்வாறான நிலைமைகளை எதிர்கொள்வதற்கு போசாக்கான உணவுகளை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். சிறுவர்கள் தொடர்ந்து விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டும்.
மேலும், குழந்தைகளை கையடக்கத்தொலைபேசியிலிருந்து விலக்கி வைப்பதே சிறந்தது. அத்தோடு குழந்தைகளின் உணவில் எண்ணெய், சர்க்கரை போன்றவற்றை முடிந்தவரை பயன்படுத்தாமல் இருந்தால் நாளை ஆரோக்கியமான குழந்தைகள் சமூகத்தை உருவாக்கலாம்.” என தெரிவித்துள்ளார்.