ஆப்பிள் நிறுவனமானது சமீபத்தில் புதிய மேக்புக் மற்றும் மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட் ஒன்றையும் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. இவற்றைத் தவிர வேறு பல புதிய அறிவிப்புகளும் ஆப்பிளின் தரப்பில் இருந்து வெளிவந்தன. குறிப்பாக ஆப்பிளின் ஆப் ஸ்டோருக்கான கொள்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று தெரியவந்துள்ளது. இதன் மூலம் குளோனிங் ஆப்ஸ் மற்றும் ஒரே மாதிரி நகலெடுக்கப்பட்ட யூசர் இன்டர்பேசை கொண்டிருக்கும் செயலிகள் அனைத்தும் தடை செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.
மேலும் இதைப்பற்றி ஆப்பிள் நிறுவனம் கூறுகையில், க்ளோனிங் செயலிகள் பலவும் பல்வேறு வழிகளில் ஆப்பிளின் ஆப் ஸ்டோர் விதிமுறைகளை மீறுவதாக தெரியவந்துள்ளது. இவற்றின் காரணமாக அந்த செயலிகள் ஆப் ஸ்டோரில் இருந்து முற்றிலும் தடை செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. மேலும் புதிய விதிமுறைகளின் படி, எந்த ஒரு ஆப் டெவலப்பரும் ஒரு செயலியில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே கோட் மற்றொரு செயலிக்கு பயன்படுத்தி புதிய செயலியை வடிவமைக்க கூடாது. இவற்றை தவிர யூசர் இன்டர்ஃபேஸ் மற்றும் செயலிகளின் பெயர்கள் ஆகியவற்றிலும் ஒன்றை போலவே மற்றும் மற்றொன்று இருக்கக் கூடாது என்று விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீப காலமாக செயலிகள் நகல் எடுக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்படுவது கூகுள் மற்றும் ஆப்பிள் என இரண்டு பெறும் நிறுவனங்களுக்கும் மிகப்பெரும் பிரச்னையாக இருந்து கொண்டுள்ளது. குறிப்பாக ஆப் டெவலப்பர்கள் சந்தையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்தமான அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளை முன்மாதிரியாக கொண்டு அவற்றை போலவே அதே கோடை பயன்படுத்தி அதன் நகலை உருவாக்கி ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் அறிமுகப்படுத்துகின்றன. ஆப்பிளின் இந்த புதிய விதிமுறைகள் மூலம் செயலிகள் நகல் எடுக்கப்படுவதை கட்டுப்படுத்த முடியும் என அந்நிறுவனம் நம்புகிறது.
மேலும் சமீப காலமாக சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவுகளை பயன்படுத்தி ஆப் டெவலப்பர்கள் புதிய செயலிகளை உருவாக்கி வருகின்றனர். இவற்றிற்கும் புதிய விதிமுறைகள் மூலம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு சுமூகமான தீர்வு காணப்படும் என்று நம்பப்படுகிறது. எனவே விதிமுறைகளை மீறி வடிவமைக்கப்படும் எந்த ஒரு செயலியும் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து நீக்கப்படும் என அந்நிறுவனம் டெவலப்பர்களை எச்சரித்துள்ளது.
மேலும் ஆப் ஸ்டோரில் இருக்கும் அனைத்து செய்திகளையும் அந்த நிறுவனம் மிகவும் கவனமாக கண்காணித்து வருவதாகவும், ஆப் ஸ்டோரின் விதிமுறைகளை பின்பற்றி உருவாக்கப்படும் க்ளோனிங் செயலிகளை ஆப்பிள் நிறுவனம் நீக்காது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், செயலிகளை பயன்படுத்தும்போது காண்பிக்கப்படும் விளம்பரங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது விளம்பரங்கள் காண்பிக்கப்படும் போது குறிப்பிட்ட வயது வரம்பை மீறி விளம்பரங்கள் காண்பிக்கப்படும் பட்சத்தில் அதை பற்றி புகார் அளிப்பதற்கும் வசதி உருவாக்கப்பட வேண்டுமென விதிமுறைகள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.