நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம் என்று சந்தேகிக்கப்படும் ட்ரோன்கள் மற்றும் எதிரி நாட்டு ஏவுகணைகளை அழிக்க லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அமைப்பை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
இந்தச் சோதனையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஏப்ரல் 13ஆம் திகதி ஆந்திர மாநிலம் கர்நூல் அருகே உள்ள தேசிய திறந்தவெளி சோதனைத் தளத்தில் நடத்தியது.
எதிர்காலத்தின் “மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்” என்று அழைக்கப்படும் லேசர் தொழில்நுட்ப ஆயுதங்களை உருவாக்கிய சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக மாறியுள்ளது.
“இது அதிஉயர் தொழில்நுட்ப பயன்பாட்டின் தொடக்கம் மட்டுமே” என்று சோதனை வெற்றியடைந்த பின்னர் இந்தியா அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் போர்கள் நடக்கும்போது, ட்ரோன் தாக்குதல்களைத் தடுக்க ஒவ்வொரு நாடும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் செயல்படுவது அவசியமாகிவிட்டது.

தற்காலிகமாக, அதிக சக்தி கொண்ட லேசரும், அதி நுண்ணலை போன்ற தொழில்நுட்பங்களையும் ஆயுதமாக மாற்றும் பணியில் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சூழ்நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) லேசரால் வழிநடத்தப்படும் ஆற்றல் ஆயுதமான ‘டி.இ.டபிள்யூ ( DEW) Mk-II(A) ஐ உருவாக்கியுள்ளது.
தரையில் இருந்து இயக்கப்படும் லேசர் ஆயுதம், டி.ஆர்.டி.ஓவிலுள்ள உயர் ஆற்றல் அமைப்பு மற்றும் அறிவியல் மையத்தின் (CHES) ஆதரவின் கீழ் பரிசோதிக்கப்பட்டது.ட்ரோனை லேசர் கற்றைகள் வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பான காணொளி எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது.
உயர் சக்தி லேசர் தொழில்நுட்பத்தைக் கொண்ட நாடுகளில் இந்தியா நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் உள்ளது, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிடம் இந்த தொழில்நுட்பம் உள்ளது.
‘டி.இ.டபிள்யூ’ (DEW) உதவியுடன் இலகுரக ஆளில்லா விமானங்களை மட்டுமல்ல, ஹெலிகொப்டர்களையும் கூட முற்றிலுமாக அழிக்க முடியும் என்று டி.ஆர்.டி.ஓ அறிவித்துள்ளது.
