எமது தமிழ் மொழியின் அடையாளம், தமிழ் இனத்தின் உரிமை, தேசியத்தை எங்கள் கலாச்சாரத்தின் பழமையை,பொருளாதாரம்,அபிவிருத்தியை எப்படி பாதுகாப்பது என்பது தொடர்பாக சிந்திக்கின்ற ஒருவரை மக்கள் சிந்தித்து நடைபெறவுள்ள தேர்தலில் தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு போட்டியிடும் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார். இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் தேர்தல் பணிமனை சனிக்கிழமையன்று (26) மாலை சித்தாண்டியில் திறந்து வைத்து உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,
தென்னிலங்கை தேசிய கட்சிகள் பல தமிழ் தேசியத்தை சிதைப்பதற்காக மாற்றம் என்ற புதியதொரு வார்த்தைப் பிரயோகத்தை பயன்படுத்துகின்றன. மாற்றம், அபிவிருத்தி, சமத்துவம் என்ற அடிப்படையிலும் தமிழ் தேசியத்தை இல்லாது ஒழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
கடந்து போன யுத்தத்தில் எதிர்நோக்கிய யுத்த நிகழ்வுகளின் வலியை எங்களால் மறக்கமுடியாது. பாரிய யுத்தத்தை கண்டு பல உயிரிழப்புக்களை இழந்திருக்கிறோம்.அதற்கான தீர்வுகள் இன்றியே எமது பயணம் தொடர்கிறது. போராட்டம் முடிந்த பின்னரும் எமது மக்களுக்கான அடக்குமுறைகள் முடிந்தபாடு இல்லை.
நில அபகரிப்புக்கள, கடல் வளம், விவசாயம் சார்ந்த எமது பிரதேசம் ஒரு வித்தியாசமான வடிவத்தில் சூறையாடிக் கொண்டிருக்கிறது. இவ்வாறான விடயங்களை நாம் ஒரு பார்வையாளராக இருந்து பார்த்துக்கொண்டிருக்கமுடியாது.
எனவே இவ் தேர்தலிலே தமிழ் தேசிய பற்றாளர்களை தேர்வு செய்வதன் மூலம் எங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற ஆதரவு தெரிவிக்கின்ற தேவை உள்ளது. எங்களுக்கு எதிராக இடம்பெறுக்கின்ற அடக்கு முறைகளுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது.
மாற்றம் என்ற அடிப்படையில் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது இவ் கருப்பொருளிலே எங்களது இனம், நிலம் சார்ந்த விடயங்கள் ஏதும் குறிப்பிடப்பட்டுள்ளதா என்றால் எதுவும் இல்லை.அவர்களால் அபிவிருத்தி,சமத்துவம் சார்ந்த விடயங்களை மட்டும் கூறி எவ்வாறு இழந்து போன எமது மக்களின் வலிகளை நீக்கமுடியும்.
மட்டககளப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் தேசியத்தின் பால் பற்றுக் கொண்டவர்களாகவும் எங்களது சவால்கள் எதிர்கொள்பவர்களாகவும் பொருளாதாரத்தை விருத்தி செய்பவர்களாகவும் இருக்கவேண்டும்.
எமது மாவட்டத்தில் உள்ள பல்வேறு பின்தள்ளப்பட்ட பிரதேசங்களில் மருத்துவசேவை வசதிகள் போதாமல் உள்ளது.போசனை போதாது பெற்றோர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்பு தேடி புலம் பெயர்வதனால் பிள்ளைகள் அனாதைகளாகவுள்ளனர்.பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இவ்வாறான பல பிரச்சினைகளுக்கு தீர்வு பெற தொடர்பான திட்டங்களை முன்னெடுக்கும் போது அவற்றுக்கு தீர்வு கிடைக்கும்.
நான் குறிப்பிட்ட பதவி நிலை உத்தியோகஸ்த்தராக இருந்தபடியால் இவ்வாறான சம்பவங்கனை கண்டு குரல் எழுப்பமுடியாத அழுத்தமான சூழ் நிலையில் அவ்வேளைகளில் காணப்பட்டேன்.அத்துடன் மக்களுக்கான மருத்துவ வசதிகளைக் கூட முழுமையாக பெற்றுக் கொடுகக முடியாத நிலையில் வைத்திய அதிகாரிகளாக இருந்தோம்.
எல்லையோர கிராமங்கள் சூரையாடப்பட்டன. கச்சைக் கொடி சுவாமி மலை, மங்களகம, கெவிளியாமடு மட்டுமல்லாது ஏறாவூர் போன்ற கிராமங்களில் உள்ள சுகாதார நிர்வாக நடவடிக்கைகளை எமது சுகாதார திணைக்களத்துடன் இணைத்தோம் அப்போது பாரிய அரசியல் நெருக்கடிகளை எதிர்நோக்கினோம்.
அவ்வாறான நேரத்தில் நாங்கள் குரல் கொடுக்கும் போது எங்களது அடிப்படை மனித உரிமையை அரசியல் வாதிகள் தட்டிப்பறிக்கின்றனர். எனவே மக்களின் பிரச்சினை, மக்களின் அடிப்படை உரிமை, அபிவிருத்தி மற்றும் தேசியத்திற்காக குரல் கொடுக்கவேண்டுமென்ற அடிப்படையில் மருத்துவத் துறையில் இருந்து வந்துள்ளேன்.
அபிவிருத்தி என்பதற்காகவும் பொருளாதார ஸ்த்திரத்தன்மைக்காகவும் எங்களது அடிப்படையான தமிழ் தேசியமும் நிலமும் மொழியும் கலாச்சாரத்தையும் இழந்து விட்டு நாங்கள் அம்மனமாக நிற்கமுடியாது.
அரசியல் சலுகைகளுக்காக அமைச்சு பதவிக்காக சோரம் போகாத இலங்கை தமிழ் அரசு கட்சியிலே பயணம் செய்ய நினைத்தேன்.எனவே வாக்களிப்பு வீதத்தில் அதிக அக்கறை செலுத்தி வாக்களிப்பு வீதத்தினை அதிகரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.