பூமிக்கு அப்பால் விண்வெளியில் இருந்தவாறு பெண் விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
பூமிக்கு வெளியே சுமார் 260 மைல் தொலைவிலிருந்து தீபாவளி கொண்டாட்டங்களைக் கண்டுகளிக்கவிருப்பது குறிப்பிடத்தக்க அனுபவமாக இருக்குமென சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தவாறே அவர் உற்சாகத்துடன் பேசியுள்ளார்.
கடந்த 5 மாதங்களாக சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்தபடியே, அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தோ்தலில் வாக்களிக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்க சுவாரசியமான தகவல்களுள் ஒன்றாகும்.
இந்த நிலையில், சுனிதா வில்லியம்ஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தங்களது குடும்பத்தில் பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கலாசாரத்தை பேணிப் பாதுகாப்பதற்காக, தனது தந்தை அர்ப்பணிப்புடன் செயல்பட்டு தனது குடும்பத்தினருக்கு தீபாவளி குறித்தும், பிற இந்திய பண்டிகைகளைப் பற்றியும் கற்றுத்தந்ததையும் நினைவுகூர்ந்துள்ளார்.
தீபாவளி கொண்டாட்டங்களில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், துணை ஜனாதிபதி கமலா ஹரிஸும் பங்கேற்று சிறப்பிப்பதற்காக நன்றியும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தவாறே அவர் வெளியிட்டுள்ள காணொலிப் பதிவில், “இன்று வெள்ளை மாளிகையிலும், உலகம் முழுவதும் தீபாவளியைக் கொண்டாடும் ஒவ்வொருவருக்கும் தித்திப்பான தீபாவளியாக அமைந்திட எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
நல்ல விஷயங்கள் நிலைத்திருக்கும் சூழலில், தீபாவளி மகிழ்ச்சிக்கானதொரு கொண்டாட்டம். இந்த சிறப்பான தருணத்தை எங்கள் சமூகத்துடன் இணைந்து இன்று கொண்டாடியதற்கும், எங்களது பலவிதமான பங்களிப்பை அங்கீகரித்ததற்காகவும் ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸுக்கும் நன்றி!” எனப் பேசியுள்ளார்.