எந்த நோக்கத்தோடு எங்களை சிங்கள தேசம் அழித்ததோ அதற்கான பரிகாரத்தை நாங்கள் நாடாளுமன்றத்தில் பேரம் பேசி , ஐநா மனித உரிமையில் இன அழிப்பு தொடர்பான பொறுப்புக்கூறலை சரியான இடத்துக்கு கொண்டு செல்ல ஆணையை தாருங்கள் என சைக்கிள் சின்ன மட்டக்களப்பு வேட்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் கட்சி காரியாலயம் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அவர் இது தொடர்பில் ஆவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த தேர்தலை இதுவரைக்கும் நடந்த தேர்தல்போல எங்கள் மக்கள் கையாளக் கூடாது என ஆரம்பத்தில் இருந்தே தெரிவித்துவருகின்றோம். இந்த தேர்தல் தமிழ் மக்களுக்கு பேரம் பேசக்கூடிய இறுதி சந்தர்ப்பம்.
இந்த தேர்தலுக்கு பின்னர் தமிழ் மக்களுடைய வாழ்வு இந்த தீவிலே ஒரு அடிமைத்த னமாக இருக்கப் போகின்றதா? அல்லது சிங்கள, தமிழ் முஸ்லீம் மக்கள் சம உரிமையோட வாழப்போகின்றோமா? என்ற ஒரு கேள்வி எழுப்புகின்ற ஒரு தேர்தலாக அமையப் பெற்றிருக்கின்றது.
வீடு, சங்கு சின்னத்திலே போட்டியிடுகின்ற அந்த அரசியல்கட்சிகளின் கடந்தகால செயற்பாடு பற்றி எங்கள் மக்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் கிடையாது.
அத்தனை பேரும் இந்த இனத்தை அழிப்பதற்காக 2015ம் ஆண்டு ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கான இடைக்கால யாப்பை உருவாக்கி வைத்துள்ளனர். எனவே இந்த மண்ணிலே தமிழ் மக்கள் நிம்மதியாக, சிங்கள மக்கள் போன்று ஒரு சுபீட்சத்துடன் வாழவேண்டும் என்றால் இந்த தேர்தலை பயன்படுத்த வேண்டும் என்றார்.