அம்பாறை மாவட்டத்தில் எங்கள் கட்சிக்கு எதிராக வாக்களித்துவிட்டு எவ்வாறு எங்கள் கட்சியின் தேசியப்பட்டியலில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் நிசாம்காரியப்பருக்கு உரிமை கோரமுடியும்? என கேள்வி எழுப்பி நாங்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் இடத்தில் அவருடைய தேசிய பட்டியலை நிறுத்துவேன் என ஜக்கிய மக்கள் சக்தி ரெலிபோன் சின்னத்தில் போட்டியிடும் மாவட்ட அமைப்பாளர் ஹஸன்அலி தெரிவித்தார்.
சம்மாந்துறையிலுள்ள அவரது கட்சி காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் அதிகமாக முஸ்லிம்கள் வாழும் பிரதேசம் குறிப்பாக அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த தடவை மரத்தில் தனித்து போட்டியிடுகின்றது. அதேபோல ஜக்கிய மக்கள் சக்தியும் தனித்து களமிறங்கியுள்ளனர். இதேபோன்று தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றது.
இது சவால் மிக்க ஒரு தேர்தல் எங்கள் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டிய கட்டம். கடந்த காலங்களில் சம்மாந்துறை தொகுதி நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்திருந்தது. இந்த தடவை ஏனைய தொகுதிகளுடன் சேர்ந்து சம்மாந்துறை தொகுதி மக்களுடைய பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கவேண்டும் என்பதற்காக ஜக்கிய மக்கள் சக்தி இந்த முறை தனித்து களமிறங்கியுள்ளது.
கடந்த 25 வருடமாக நாடாளுமன்றத்தில் இருந்த கல்முனை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பட்டியலில் இடவில்லை இதனால் அவருடைய தனிப்பட்ட செல்வாக்கு வாக்குவங்கி இந்த முறை சிதறி அடிக்கப்படும் என்பதுடன் மக்கள் நடந்த நிகழ்வுகளை கொண்டு கோபமடைந்துள்ளனர். வாக்குகள் சிதறியடிக்கப்படும் போது முஸ்லிம்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு.
எனவே கல்முனை வாழ் மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் இந்தமுறை உங்களுடைய தொகுதி பிரதி நிதித்துவத்தை பாதுகாக்க கல்முனை தொகுதியில் உள்ள மக்கள் வாக்குகளை வீண் விரயம் செய்யாமல் எங்கள் கட்சியின் ரெலிபோன் சின்னத்துக்கும் எனது இலக்கமான 4 க்கும் கல்முனை தொகுதியில் போட்டியிடும் ராசக்கின் இலக்கமான 3 க்கும் புள்ளடியிட்டு வாக்களியுங்கள்.
அதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரே ஜனாதிபதிக்காக ஒரே சின்னத்துக்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரே மேடையில் ஒன்றாக அமர்ந்திருந்து வேலை செய்தோம். இந்த ஒற்றுமையை சீர்குலைத்ததற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூவ் ஹக்கீம் தான் பொறுப்பு கூறவேண்டும்.
திகாமடுல்ல மாவட்டத்தில் மூன்று கட்சியும் ஒன்றாக கேட்டவேண்டும்; அதனால் நாடாளுமன்ற ஆசனங்களை அதிகரித்து கொள்ளலாம் என சஜித் பிரேமதாஸா கடைசி நிமிடம் வரை வலியுறுத்திக் கொண்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்தை முஸ்லிம் காங்கிரஸ் தவறிவிட்டது
அவர் அந்த ஆசன பங்கீட்டில் பேரம் பேசுவதில்; அதிகமாக இருந்ததனால் அவ்வாறன நிலை வந்தது இல்லாவிட்டால் நாங்கள் எல்லோரும் ஒரே குடையின் கீழ் ஒரே சின்னத்தில் போட்டியிட்டிருப்போம். இதனால் 3 ஆசனங்களை இலகுவாக பெற்றிருக்கலாம் இந்த ஒற்றுமையில்லாததால் பிரதிநிதிகள் இல்லாமல் போக வாய்ப்பு உண்டு இதனால் முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய பாதிப்பு ஏற்படும்.
அதேவேளை மாவட்டத்தில் 64 கட்சிகளைச் சேர்ந்த 640 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் சுயேச்சைக் குழுக்கள் தேர்தலை விளையாட்டாக கருதுகின்றனர். அவர் அவர் சார்ந்த சமூகத்திற்கு அந்த சுயேச்சைக் குழுக்களினால் எந்த பிரயோசனமும் அடையப் போவதில்லை. சுயேச்சைக் குழுக்களில் போட்டியிடுகின்றவர்களுக்கும் எந்த விமோசனமும் கிடைக்கப் போவதில்லை அதன் மூலம் அவர்கள் சமூகத்துக்கு அல்லது அந்த பிராந்தியத்துக்கு கிடைக்கின்ற பிரதிநிதித்துவத்தை ஒன்று இரண்டு வாக்குகளால் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புக்கள் உண்டு
எனவே வாக்காளர்கள் மக்கள் ஆழமாக சிந்தித்து அந்த சுயேச்சை குழுக்களுக்கு வாக்களிப்பதை தவிர்த்துக் கொள்வதனால் சமூகத்தில் உள்ள பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கு வாய்ப்பாக அமையும் என்பதுடன் மக்கள் பிரதான கட்சிகளுக்கு வாக்குகளை அளிப்பதன் மூலம் எங்களுடைய பிரதிநிதித்துவத்தை நாங்கள் உறுதி செய்து கொள்ள முடியும்
எங்கள் கட்சியின் தேசிய பட்டியலில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்கு இவர்கள் ரெலிபோனுக்கு எதிராக வாக்களித்துவிட்டு எவ்வாறு தேசிய பட்டியல் உரிமை கோரலாம் ? என மக்களும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
நாங்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் இடத்தில் இருந்து நிசாம் காரியப்பருடைய தேசிய பட்டியலை நிறுத்துவதற்கு உங்கள் வாக்குகள் உதவி செய்யும் என நாங்கள் நம்புகின்றோம்.