முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பராமரிக்கும் நபர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த (11) ஆம் திகதி மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு, பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் தலைமையில் சமூக சேவை உத்தியோகத்தர் திரு இ. சிவலிங்கம் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவினரால் ஒருங்கிணைக்கப்பட்டது.
கருத்தரங்கில் வளவாளர்களாக வலயக்கல்வி அலுவலகத்தின் உதவி கல்வி பணிப்பாளர் திரு அ. ஜெயநாதன், சட்டத்தரணி திருமதி ம. கோவிதா, ஆரையம்பதி சுகாதார வைத்திய அலுவலகத்தின் வைத்திய அதிகாரி திரு ஜி. திலக்ஷன் மற்றும் மாவட்ட செயலக ஆற்றுப்படுத்தல் உத்தியோகத்தர் திரு த. நிஷாந்தன் ஆகியோர் பங்கேற்று கருத்துரைகள் வழங்கினர்.
பிரதேச முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களை பராமரிக்கும் குடும்பத்தினர் கலந்து கொண்ட இக்கருத்தரங்கில், பராமரிப்பில் தேவையான மனப்பாங்கு, நம்பிக்கை மற்றும் நல்லுறவு வளர்ப்பு, பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான சட்ட வழிகாட்டல்கள், உடல், உள மற்றும் சுகாதார பராமரிப்பு, சமூக இணைப்பு மற்றும் அணுகுமுறை வசதிகள் ஆகியவை குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வின் மூலம் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் குறித்து பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் சட்ட உரிமைகள் தொடர்பான தெளிவு கலந்து கொண்டோருக்கு கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது.























