சமூக வலைதளங்களில் பொதுப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவுக்கு எதிராக அவதூறான அறிக்கை வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) செயற்பாட்டாளர் மஹிந்த பத்திரணாவுக்கு எதிராக 10 பில்லியன் ரூபா நட்டஈடு கோரி நேற்று (சனிக்கிழமை) கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டின் பின்னணியானது, பிரதி அமைச்சர் வட்டகலவை இலக்கு வைத்து அவதூறான கருத்துக்களைக் கொண்ட ஒரு ஃபேஸ்புக் காணொளியை, மஹிந்த பத்திரணா செப்டம்பர் 2025இல் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தனக்கு எதிராக வெறுப்பு மற்றும் தவறான அறிக்கைகளைப் பரப்புவது குறித்துப் பிரதி அமைச்சர் வட்டகல, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு அளித்திருந்தார்.

இந்தப் பொய்ச் செய்திகளை உருவாக்கியவர்கள் மற்றும் பரப்பியவர்களுக்கு எதிராகச் சிவில் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் கொழும்பில் உள்ள ‘சின்னமன் லைஃப்’ குடியிருப்பு வளாகத்தில் பிரதி அமைச்சர் வட்டகல வீடு வாங்கியதாகச் சமூக ஊடகப் பதிவுகள் முன்னர் கூறியிருந்தன. இந்தக் கூற்று முற்றிலும் தவறானது மற்றும் அவதூறானது என ஃபேஸ்புக் மூலம் வட்டகல பின்னர் தெளிவுபடுத்தியிருந்தார். அத்துடன், பொதுமக்களின் நம்பிக்கையைத் தான் ஒருபோதும் காட்டிக் கொடுத்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், அவதூறு குற்றச்சாட்டுக்காகவே மஹிந்த பத்திரணாவுக்கு எதிராக 10 பில்லியன் ரூபா இழப்பீடு கோரி சட்ட ரீதியான கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.








