ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ராஜபக்ச குடும்பத்தினரை இலக்காகக் கொண்டு திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த மகிந்த ராஜபக்ச, தற்போதைய அரசாங்கம் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக பழிவாங்கும் நோக்கத்துடனேயே தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருவதாக தெரிவித்தார்.
“ஒவ்வொரு நாளும் எம்மைக் குறிவைத்து ஏதாவது ஒரு வகையில் பழிவாங்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கம் இதற்கே அதிக முக்கியத்துவம் அளித்து செயற்படுகிறது” என அவர் கூறினார்.
மேலும், நாட்டின் தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கோ அல்லது அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கோ அரசாங்கம் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அரசாங்கத்தின் அரசியல் அணுகுமுறையும் பொருளாதார நடவடிக்கைகளும் காரணமாக, ஆட்சியின் மீது மக்கள் மத்தியில் குறுகிய காலத்திலேயே அதிருப்தி உருவாகியுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
எனினும், இந்தக் கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பதில் இதுவரை வெளியாகவில்லை.








