கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியுற்றிருந்தாலும் நிழல் பாராளுமன்ற உறுப்பினராக எனது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வேன் என்று தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அருண்மொழிவர்மன் தம்பிமுத்து நேற்று (17) திகதி மட்டக்களப்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் நடந்து முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியைஆதரித்து வாக்களித்த அனைத்து மக்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். தற்போது இலங்கையில் நாடாளுமன்றத்தில் புதிய அரசாங்கம் பதவியேற்க இருக்கின்றது. அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கும் அவரது தேசிய மக்கள் சக்திக்கும் மூன்றில் இரண்டு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றது.
இந்த சந்தர்ப்பத்தை அவர்கள் முழுமையாக பாவித்து இந்த நாட்டிலே தீர்க்கப்படாத பல விடயங்களை தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அதை அவர்கள் கையில் எடுக்க வேண்டும் என்ற விடயத்தையும் நான் அவர்களுக்கு வலியுறுத்த கடமைப்பட்டிருக்கின்றேன்,
அதேபோல் எமது ஆதரவாளர்களர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியாது 20 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் புத்தெழிற்சிபெற வேண்டும் என்று கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். எமது கட்சியின் ஆதரவாளர்களுக்கும் நான் கூற விரும்பும் விடயம் என்னவென்றால் எமது செயல்பாடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் தமிழர் விடுதலை கூட்டணியானது தற்போது எனக்கு ஏற்பட்டிருக்கின்ற இந்த நிலையில் இருந்து முழுமையாக புத்தெழிற்சிபெறும் என்ற முழுமையான நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
அதற்கான வேலைத் திட்டங்களில் நான் முன்னெடுத்துச் செல்ல இருக்கின்றேன். எமது ஆதரவாளர்களுக்கு நான் கூறியிருக்கின்றேன், மட்டக்களப்பிலே மாற்றத்தை கொண்டு வர வேண்டும். மட்டக்களப்பில் ஒரு புதிய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று கூறி இருக்கின்றேன். அதன் அடிப்படையில் நாங்கள் செயற்பாடுகளையும் முன்னெடுக்கவிருக்கின்றோம்.
இன்று மட்டக்களப்பில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல கடமைகள் இருக்கின்றன, மட்டக்களப்பு மாவட்டத்தில் தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் இருக்கின்றன, நிச்சயமாக எமக்கான நிலப் பிரச்சினை இருக்கின்றது. இன்னும்சொல்ல வேண்டுமென்றால் மேச்சல் தரை பிரச்சனை இருக்கின்றது, வளங்கள் சூறையாடப்படும் நிலைமை காணப்பட்டு வந்திருக்கின்றது.
இதற்கெல்லாம் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும். நானும் ஒரு நிழல் பாராளுமன்ற உறுப்பினராக இந்த மாவட்டத்திலே தொடர்ச்சியாக எனது நிலைப்பாட்டை, பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வேன் என்றும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.