உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போது பாரம்பரியமான தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களிடம் தமிழ் ராஜபக்ஸக்களை கண்டோம். தமிழ் ராஜபக்ஸக்கள் தோற்றம் பெறுவார்கள் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. இது கவலைக்குரியது. வடக்கு மாகாண மக்களின் ஆதரவு எமக்கு உள்ளது. இது ஆரம்பத்தின் முதல் வெற்றியாகும். வடக்கில் பலமான அரசியலுக்கான அத்திவாரமிட்டுள்ளோம். நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திகளை முன்னிலைப்படுத்தி வடக்கு மற்றும் கிழக்கில் செயற்படுவோமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும், சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
சுய விருப்பத்தின் அடிப்படையில் வெகுவிரைவில் அமைச்சின் விடயதானங்கள் மறுசீரமைக்கப்படும். புதிய தரப்பினர்கள் அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். மக்கள் எதிர்பார்த்த அரச நிர்வாக கட்டமைப்பை வினைத்திறனாக்குவோம் எனவும் தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அரச தொலைக்காட்சி ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அந்த கலந்துரையாடலின் ஒருசில விடயங்கள் வருமாறு,

பாராளுமன்றத்தை கட்டுப்படுத்துகிறோம். பாராளுமன்றத்தை கூத்து கூடமாக்க இடமளிக்க முடியாது. பாராளுமன்றத்தை நாங்கள் நிர்வகிக்கிறோம்.புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளோம். கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்குள் கஞ்சா போதைப்பொருளை பாவித்தார்கள்.
குழுவாக ஒன்றிணைந்து போதைப்பொருள் பாவித்தார்கள். நான் நேரடியாக பார்த்துள்ளேன்.ராஜபக்ஸக்களின் காலத்தில் தான் பாராளுமன்றம் மிகமோசமாக பாதிக்கப்பட்டது. பாராளுமன்றத்துக்கு எதிராக மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி எமக்கு ஆணை வழங்கியுள்ளார்கள்.
பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். சிறந்த கலாசாரம் மோசமான கலாச்சாரத்தை முடக்கும் போது மோசமான கலாச்சாரத்துக்கு பழக்கப்பட்டவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள்.
இதனை நாங்கள் கட்டுப்படுத்துவார்கள். எனக்கு என்ன பெயர் சூட்டினாலும் பரவாயில்லை. கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொள்வோம். பாராளுமன்றத்தை கூத்து கூடாரமாக்க எவருக்கும் இடமளிக்க போவதில்லை.
சண்டித்தனத்துக்கு இடமில்லை
எதிர்க்கட்சிகளின் ஒருசில உறுப்பினர்கள் ஊடக பிரபல்யத்துக்காக பாராளுமன்ற அமர்வின் போது நிலையியல் கட்டளைக்கு முரணாக செயற்பட்டு சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு
விளைவிக்கிறார்கள். தவறுகளை சுட்டிக்காட்டும் போது தான் பல ஆண்டுகாலமாக பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கிறோம். நீங்கள் புதியவர்கள் இவற்றை குறிப்பிடக் கூறாது என்று அச்சுறுத்தல் விடுக்கிறார்கள்.
கடந்த காலங்களில் ராஜபக்ஸர்களின் முன்னிலையில் பொம்மை போல் இருந்தவர்கள் தற்போது வீரர்களாகியுள்ளார்கள். அடிமட்டத்தில் இருந்து வந்தவர்கள் ஆட்சியமைத்துள்ளதை எதிர்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாரடைப்பால் இறந்து விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
ஒருசிலர் உளவியல் ரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். யதார்த்தத்தை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 2000 ஆம் ஆண்டு நான் முதன்முறையாக பாராளுமன்றத்துக்கு தெரிவானேன்.
அப்போது சிரேஷ்ட உறுப்பினர்களான மஹிந்த ராஜபக்ஷ,ரணில் விக்கிரமசிங்க,லக்ஷ்மன் கதிர்காமர்,இரா. சம்பந்தன் ஆகியோர் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களை பார்த்து நீங்கள் புதியவர்கள் என்று குறிப்பிட்டு புறக்கணிக்கவில்லை. இம்முறை தான் அவ்வாறான நிலை காணப்படுகிறது. இந்த நோய் இன்னும் ஓரிரு மாதங்களில் குணமடையும்.
திணைக்கள தலைவர்களின் பதவி விலகல்கள்
2024 ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தற்காலிக அடிப்படையில் தான் 90 சதவீதமானோருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.ஒருசிலர் சுய அடிப்படையில் தான் பதவி விலகினார்கள்.
ஒருசில நியமனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும். பலவீனமானவர்களை வைத்துக் கொண்டு நிறுவன கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.ஒருசில அரச அதிகாரிகள் மீது நம்பிக்கை கொள்ள முடியாது.
சுய விருப்பத்தின் அடிப்படையில் வெகுவிரைவில் அமைச்சின் விடயதானங்கள் மறுசீரமைக்கப்படும். புதிய தரப்பினர்கள் அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.
தமிழ் ராஜபக்ஸக்களின் தோற்றத்தை எதிர்பார்க்கவில்லை, கவலையடைந்தோம் வடக்கு என்பது யாழ்ப்பாணமல்ல, வன்னிக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையில் பாரிய வேறுபாடுள் உண்டு.
வடக்கு மாகாணத்தில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் அதிக வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.மன்னார்,வவுனியா உள்ளிட்ட பகுதிகளிலும் முன்னிலையில் உள்ளோம்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டாம் நிலையில் உள்ளோம்.ஏனைய சிங்கள கட்சிகளை காட்டிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி முன்னிலையில் உள்ளது.
பாராளுமன்றத் தேர்தலை காட்டிலும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் வாக்குகள் குறைவடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
வடக்கு மாகாணத்தில் போட்டியிட்ட எமது வேட்பாளர்கள் புதியவர்கள்.அத்துடன் ஒரு தரப்பினர் எமக்கு எதிராக இனவாதத்தையும் கட்டவிழ்த்து விட்டார்கள்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போது பாரம்பரியமான தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களிடம் தமிழ் ராஜபக்ஸர்களை கண்டோம்.தமிழ் ராஜபக்ஸர்கள் தோற்றம் பெறுவார்கள் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. இது கவலைக்குரியது.
வடக்கு மாகாண மக்களின் ஆதரவு எமக்கு உள்ளது. இது ஆரம்பத்தின் முதல் வெற்றியாகும். வடக்கில் பலமான அரசியலுக்கான அத்திவாரமிட்டுள்ளோம். நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திகளை முன்னிலைப்படுத்தி வடக்கு மற்றும் கிழக்கில் செயற்படுவோம் என்றார்.