புதிய அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவரையும் உள்வாங்குமாறு தேசிய முஸ்லிம் கவுன்ஸில், கிழக்கு முஸ்லிம் பேரவை, முஸ்லிம் லீக் வாலிப முன்னணி ஆகிய அமைப்புகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஜனாதிபதி அனுரா குமார திஸ்ஸநாயக நியமித்த அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்தில் இருந்து எவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நிகழ்ந்துள்ள இந்த விடயம் தொடர்பில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸ் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,
2024.11.14 ஆம் திகதி நடைபெற்ற 10 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தலில் நீங்கள் தலைமை வகிக்கும் அணி -அனைத்து மக்களினதும் ஆதரவுடன் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து உங்களால் நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவையின் எதிர்காலச் செயற்பாடுகள் சகல வழிகளிலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு, இந்த நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்காகப் பணியாற்றத் கூடிய அமைச்சரவையாக மாற வேண்டும் என நாங்கள் மனதாரப் பிரார்த்திக்கிறோம்.
இந்த அமைச்சரவையில் எமது முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியொருவர் இல்லாதிருப்பதனால் எமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அமைச்சரவைக்கு முன்வைப்பதற்கு உள்ள வாய்ப்பு இல்லாமல் போகிறது என்பதனை கவலையுடன் முன்வைக்கிறோம்.
ஜனாதிபதி அவர்கள் இந்த விடயத்தில் கரிசனை காட்டி துரிதமாக முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்காக எமது சமூகத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் – எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.