மட்டக்களப்பு, கல்லடி பிரதேச வீடொன்றில் தனிமையில் தங்கியிருந்த சுவிஸ் நாட்டு பிரஜையான பெண் ஒருவரை வீடு புகுந்து தாக்கி பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கல்லடி பேபி சிங்கம் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய சுப்பையாபிள்ளை கோணேஸ்வரி 1990 ஆம் ஆண்டு குடும்பத்துடன் இடம்பெயர்ந்து சுவிஸ் நாட்டுக்குச் சென்று, குடியேறி அங்கு தாதியாகவும் கணவன் பொறியலாளராகவும் மகள் விஞ்ஞானியாகவும் பணியாற்றிவருகின்றனர்.
இந்தநிலையில் குறித்த பெண் தாதியர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் இலங்கையிலுள்ள தனது வீட்டை பார்ப்பதற்காக கல்லடிக்கு வந்து அவரது வீட்டில் தற்காலிகமாக தனிமையில் தங்கியிருந்துள்ளார்
இந்த நிலையில் சம்பவதினமான இன்று அதிகாலை 12 மணியளவில் வீட்டின் குளியலறை பகுதியின் யன்னல் கதவை உடைத்து உள்நுழைந்த திருடர்கள், குறித்த பெண்ணை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்த அலுமாரியை உடைத்து 72 ஆயிரம் ஸ்விஸ் பிராங் (இலங்கை நாணயம் படி கிட்டத்தட்ட இரண்டு கோடி 40 லட்சம்) மற்றும் ஒன்றேகால் பவுண் தங்க சங்கிலி, 29 ரூபாய் ஆயிரம் ரூபாய் இலங்கை நாணயம் என்பவற்றை கொள்ளையிட்டு தப்பி ஓடியுள்ள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி சப்இன்பெஸ்டர் .ஏ.எம்.எஸ்.ஏ.றஹீம் தலைமையில சென்ற பொலிசார் தடயவியல் பிரிவு மற்றும் மேப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.