எமது நாட்டில் 17 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் இருப்பதாகவும், அவர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதில் காலாவதியான திட்டம் பின்பற்றப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சர்வதேச தரங்களுக்கேற்ப அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் நடைமுறையில் உள்ளதால் இந்தத் திட்டத்தை பகுப்பாய்வு செய்து, எமது நாட்டிலுள்ள காலாவதியான முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி மோட்டார் போக்குவரத்து ஆணையாளரினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ள போதிலும் இது வரை அது அமுல்படுத்தப்படாதுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறானதொரு புதிய முறையை ஏற்றுக்கொண்டது நல்ல விடயம் தான். என்றாலும் அது செயல்படுத்தப்படாமை தான் பிரச்சினைக்குரிய விடயம்.
இந்த சுற்றறிக்கையை விரைவில் செயல்படுத்த போக்குவரத்து துறை அமைச்சர் தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டதன் பிற்பாடும் இதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்குமாறு பாராளுமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் அழுத்தங்களை பிரயோகித்ததாகவும் தெரிவிக்கப்படுவதாகவும்,இந்த சுற்றறிக்கை அமுல்படுத்தப்படும் என்ற உறுதிப்பாட்டை வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.