இலங்கைக்கு சொந்தமான பல நாள் மீன்பிடி படகு ஒன்றில் இருந்து மாலைதீவு கடல் வழியே இலங்கைக்கு 344 கிலோ கிராம் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) போதைபொருள், 124 கிலோ கிராம் கொக்கயன் ஆகிய போதை பொருட்களை கொண்டுவந்த திருகோணமலை மற்றும் தெய்வேந்திரமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேரை மாலைதீவு கடற்படையினர் சனிக்கிழமை (23) கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.
இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் மாலைதீவு கடற்படையினருக்கு வழங்கிய தகவலுக்கமைய சம்பவதினமான சனிக்கிழமை, மாலைதீவு கடலில் பயணித்த படகை கடற்படையினர் சுற்றிவளைத்து சோதனையிட்டபோது அதில் இருந்து 344 கிலோ கிராம் மெத்தம்பெட்டமைன் போதைபொருள், 124 கிலோ கிராம் கொக்கயன் போதைபொருளை கைப்பற்றியதுடன் 5 பேரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் தெய்வேந்திரமுனை திருகொணமலை பிரசேதங்களைச் சேர்ந்த 21 வயது தொடக்கம் 37 வயதுடையவர்கள் எனவும், அஷேன் புத்தா என்ற பல நாள் மீன்பிடி படகு இவ்வாறு போதை பொருள் கடத்திலில் ஈடுபட்டுவந்துள்ளதாகவும் மாலைதீவு கடற்படையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
குறித்த போதை பொருள் தொடர்பில் இரு நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கிடையே தகவல் பரிமாறப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.