மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசு கட்சி வெற்றி பெற்று இருக்கின்ற நிலைமை மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியத்தை நம்புகின்ற மக்களுக்கு ஒரு ஆறுதலான விடயமாக இருந்தாலும் தேர்தல் காலங்களில் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களுக்கு இடையிலே ஏற்பட்ட குழிபறிப்புக்களும், ஒருவரை ஒருவர் துவேஷித்தபடி தங்களுக்கான விருப்பு வாக்கில் கவனம் செலுத்தியதும் மிக பாரதூரமான தாக்கங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
ஒரு கட்சியில் போட்டியிடுகின்றவர்கள் குறைந்தது ஒரு மேடையிலாவது ஒன்றாக நின்று பொது மக்கள் முன் பேசியிருக்க வேண்டும். அது வடகிழக்கில் எந்தவொரு இடத்திலும் தமிழரசு கட்சியின் மேடையில் நடக்கவில்லை.
ஆகையினால் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருக்கின்ற காரணத்தினால் மட்டும் தாங்கள் நல்லவர்கள் என்றோ, சரியானவர்கள் என்றோ யாரும் நினைத்து விடக் கூடாது.
மக்களுடைய தெளிவான சிந்தனை தான் இதற்கு காரணமே தவிர தமிழரசு கட்சியில் போட்டியிட்டவர்கள் இதற்கு காரணம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏன் என்றால் அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம் தமிழரசு கட்சியினுடைய மட்டக்களப்பு மாவட்ட கிளையினுள் எவ்வளவு சிக்கல் ஏற்பட்டது, சாணக்கியன் ஒருபக்கம் சிறிநேசன் ஒருபக்கம், ஸ்ரீநாத் ஒருபக்கம் என்று தங்களுக்கான சொந்த விருப்பு வாக்குகளை பெறுவதில் தான் அவர்களுடைய முழு கவனமும் இருந்தது அதற்கு அவர்கள் தமிழரசு கட்சியை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது தான் உண்மையான விடயம்.
இதிலே இன்னமொரு முக்கியமான விடயம் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற சாணக்கியன் ஏன் மற்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி கூறவில்லை என்பது இங்கு கேட்கப்படவேண்டிய ஒரு கேள்வியாக இருக்குறது.
தான்தான் அதிக வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளதாக தம்பட்டம் அடிக்கும் சாணக்கியன் மற்ற வேட்பாளர்களையும் தன்னுடன் இணைத்து கொண்டு போயிருந்தால் சில சமயம் வித்தியாசமான பெறுபேறுகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்றுகொண்டு இருக்க முடியும்.
இது தொடர்பில் தமிழ் அன்பரோடு கதைக்கின்ற பொழுது அவர் கூறினார், சாணக்கியன் மற்ற வேட்பாளர்களை மதிக்காமல் நடந்து கொள்கின்ற ஒரு தன்மை காணப்படுகிறது. குறிப்பாக சிறிநேசன் மட்டக்களப்பு மாவட்டத்திலே போட்டியிடுவதற்காக தெரிவு செய்யப்பட்ட போது அதற்கு எதிராக செயற்பட்ட ஒரு நிலைமை காணப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.
எனவே தமிழ் தேசியத்தை காப்பாற்றுகின்றோம் என்ற பெயரிலே தங்கள் சொந்த நலன்களை பாதுகாப்பதை விட்டு சொந்த நலன்களுக்கு அப்பால் சென்று தமிழ் தேசியத்திற்காக தங்களை அர்பணிப்பதாக கூறுகின்றவர்கள் அதனை உண்மையில் செய்ய வேண்டும் என்பதுதான் சொல்லப்பட வேண்டிய விடயமாகவும் கேட்டுக்கொள்ளப்படவேண்டிய விடயமாகவும் இருக்கின்றது.
அதேசமயம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படத்திற்கு பிறகு சாணக்கியனுடைய பேச்சுக்களும், பேட்டிகளும் அவர் தான் ஒரு வல்லவராக தென்படுவதான ஒரு விம்பத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டதாக காணப்படுகின்றது.
சந்தர்ப்பம் தந்தால் வடக்கையும் கட்டியெழுப்புவோம் என்று அவர் கதைக்கின்ற விடயங்கள் எல்லாம் கேட்பதற்கும், அரசியலுக்கும் நன்றாக இருக்கும் ஆனால் உண்மையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்த்தில் முதலில் அவர்களுக்குள்ளேயே அந்த ஒற்றுமையையும், நம்பிக்கையையும் கட்டியெழுப்பி அதன் பின்னர் மற்ற விடயங்களை அவர் பார்க்கவேண்டும் என்பதுதான் இந்த நேரத்தில் சொல்லி நிற்கின்ற இன்னுமொரு விடயமாக இருக்கின்றது.