தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை மத்திய-தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த அமைப்பு இன்று காலை 8: 30 மணியளவில் திருகோணமலைக்கு தென்கிழக்கே 600 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.
இந்த அமைப்பு மேலும் வளர்ச்சியடைந்து தீவின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக தீவின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானம் எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மாலை அல்லது இரவு வேளையில் தீவின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.