பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணைக் குழுவில் ஆஜரான அவரது சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம, தனது கட்சிக்காரருக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டுபவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தப் போவதாக நேற்று (19) தெரிவித்தார்.
“தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கு யார் காரணம், இந்த நடவடிக்கைக்கு அவரைத் தூண்டுவது யார் என்பதை எனது கட்சிக்காரர் சார்பில் நான் வெளிப்படுத்துவேன்,” என்று வீரவிக்ரம குறிப்பிட்டார்.
இதற்கிடையில், சட்டத்தரணி வீரவிக்ரம முன்வைத்த மூன்று ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை விசாரணைக் குழு நிராகரித்தது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய நிலையியற் கட்டளை 92(F) இன் கீழ் விசாரணையை முன்னெடுக்க முடியாது என்ற ஆட்சேபனை நிராகரிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு காரணமாக தென்னகோனை பொலிஸ் மா அதிபராகக் கருத முடியாது என்ற ஆட்சேபனையும் நிராகரிக்கப்பட்டது, ஏனெனில் அவர் தொடர்ந்து பொலிஸ் மா அதிபருக்கான சலுகைகளை அனுபவித்து வருகிறார்.