எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்தமைக்காக பாராளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹனதீரவிடம் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.
பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திசைமுகப்படுத்தல் செயலமர்வு இன்று (25) இடம்பெற்றபோதே பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் இவ்வாறு மன்னிப்பு கோரினார்.
இதன்போது அவர் தெரிவித்ததாவது,
நான் தெரிந்து அந்த ஆசனத்தில் அமரவில்லை. அது எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனமென எனக்கு தெரியாது. அந்த ஆசனத்தில் அமருவதால் சிக்கல் ஏற்படுமென்றும் நான் அறிந்திருக்கவில்லை. அது துரதிஷ்டவசமாக இடம்பெற்ற ஒரு நிகழ்வு. அதற்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன் – என்றார்.
இதேவேளை தான் கடும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளதாகவும், அதனால், நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் கீழ் தனக்கு தேவையான பாதுகாப்பை எவ்வாறு, எப்போது ஏற்பாடு செய்ய முடியும் என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் சமிந்த குலரத்ன, இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சிடம் எழுத்துமூலக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றார்.