மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தால் நடாத்தப்பட்ட சாதனையாளர்களின் பாராட்டு விழா கடந்த 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் , விளையாட்டு பயிற்சியாளர்கள் என அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் க.பொ.த (சா/த ) பரீட்சையில் 9 விசேட சித்திகளைப் பெற்றவர்களுக்கும், உயர் தரத்தில் விசேட சித்தி பெற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகிய மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் நாடகம், நடனம், பாடல், மற்றும் விளையாட்டுத் துறை ஆகிய இணை பாட செயற்பாடுகளில் தேசிய மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்று, பதக்கங்களை சுபிகரித்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும் கௌரவிக்கும் முகமாக வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.குலேந்திரகுமார் தலைமையில் இந் நிகழ்வு இடம் பெற்றது.
அதில் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர பிரதம விருந்தினராகவும்,
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க , இளைஞர் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு – கிழக்கு மாகாண செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜீ.திசாநாயக்க ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டிருந்தனர்.
அதேசமயம் இரண்டாம் நாள் விழாவில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் முன்னால் செயலாளர் கே. மகேசன் பிரதம விருந்தினராகவும், விளையாட்டுத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் எம்.ஆர்.யு. சிவராஜா, மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளர் திருமதி.டி. மோகனகுமார் உடற்கல்வி பயிற்றுவிப்பாளர் திருமதி.எம். அரவிந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.