கடந்த சில நாட்களாக அனுர அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ரில்வின் சில்வா தெரிவித்த 13 ஆம் திருத்தம் மற்றும் மாகாண சபைகளை கலைத்தல் போன்ற விடயங்கள் தற்பொழுது ஒரு பெரிய பேசுபொருளாக மாறியிருக்கின்றது.
இது தொடர்பாக சில விடயங்களை இந்நேரத்தில் ஆராய்வது முக்கியமாகப்படுகின்றது.
அந்தவையில், 13ஆம் திருத்தத்தின் ஊடாக தமிழ் மக்களின் அபிலாசைகள் தீர்க்கப்படவில்லை. எனவே பயனற்ற 13ஆவது திருத்தம் களையப்பட்டு, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்க்கக்கூடியதும், அனைத்து இன மக்களுக்கும் சம உரிமைகளை வழங்கக்கூடியதுமான ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்.
‘இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் ஆட்சியில் தொடர்புகொள்ளக்கூடியவாறு, உள்ளூராட்சி, மாவட்ட, மற்றும் மாகாண மட்ட கட்டமைப்புகளுக்கு அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான அதிகாரத்தினை பகிர்ந்தளிக்கின்றதும், அரசாளுகையில் அனைத்து இனத்தவரதும் பங்கேற்பினை உறுதிசெயகின்றதுமான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்,’ என்றே தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது.

தற்போது மாகாண சபைகள் நீக்கப்படும் என்று கூறியிருப்பதானது தேர்தல் வாக்குறுதிகளுக்கு முரணானதாக அமைகின்ற போதும், தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுகின்ற விதமான அதிகாரப்பகிர்வு முறையை உள்ளடக்கியதான ஒரு கட்டமைப்பு கலந்துரையாடல்களின் அடிப்படையில் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டிருப்பதனை அவதானிக்கத் தவறக்கூடாது.
மாகாண சபைகள், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான வேட்கையினை தீர்த்துக்கொள்வதற்குப் போதுமான ஒரு கட்டமைப்பல்ல என்பது நாம் அறிந்த உண்மை. இருப்பினும் தமிழர்களினுடைய போராட்டத்தின் வெற்றியின் ஆரம்பப் புள்ளியாக அதனைக் கருதுவதில் தவறேதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த அடிப்படையில், மாகாண சபை முறையினைத் தாண்டிய ஒரு கட்டமைப்பு, எமது போராட்டத்திற்கான தீர்வினை வழங்கும் எனின், அது தொடர்பில் நாம் கவனம் செலுத்துவது அவசியமானது. “மாகாண சபைகள்,” “மாகாண சபைகள் நீக்கம்,” என்ற வாக்கியங்களுக்குள் எம்முடைய கருத்துருவாக்கத்தினை மட்டுப்படுத்திக்கொள்ளாமல், மாற்றீடான கட்டமைப்பு எவ்வாறானதாக அமைய வேண்டும் என்பது தொடர்பிலான கலந்துரையாடல்களையும், கருத்துருவாக்க செயல்முறைகளையும் தமிழரசுக் கட்சியினரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களும், வட-கிழக்கில் வாழுகின்ற அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கியதான குடியியல் மற்றும் அரசியல் அமைப்புகளினதும் பங்கேற்புடன் முன்னெடுக்க வேண்டும்.

ஏதேனும் அரசியலமைப்பு வரைபு தெற்கில் தயாரிக்கப்பட்டு மக்களிடம் முன்வைக்கப்படுவதற்கு முன்னர், தற்போதுள்ள, சமூக-அரசியல் சூழமைவிற்குப் பொருத்தமானதும், நடைமுறைச்சாத்தியமுள்ளதுமான முன்மொழிவுகளை ஆக்கபூர்வமான பல்-துறை, பல்-குழு கலந்துரையாடல்களினூடாக உருவாக்கிக்கொள்வது அவசியம்.
இவ்வாறான விடயங்களினைத் தான் எம்முடைய மூத்த அரசியல் தலைவர்கள் முன்னெடுத்தார்கள். இதனைத் தான் மக்களும் தற்போதைய தலைவர்களிடமும் எதிர்பார்க்கிறார்கள்.
இவற்றினை சரியாக நிறைவேற்றுகின்ற போது, தேர்தலை மையப்படுத்திய நாடகங்களுக்கு அவசியம் இருக்காது.