1980 களில் மக்கள் விடுதலை முன்னணி இனவாதத்தை முன்னிலைப்படுத்தி மக்களை கொலை செய்யும் போது அதற்கு எதிராக ரேணுக பெரேரா முன் நின்றவர். அவ்வாறான ஒருவரை இந்த அரசாங்கம் கைது செய்வது அரசியல் பழிவாங்கலாகவே நாம் பார்க்கிறோம்.
நாட்டு மக்களுக்கு பொய்க்கூறி அதிகாரத்துக்கு வந்த அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தற்போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் மக்களை திசை திருப்பவே இவ்வாறு கைதுகளை மேற்கொள்கிறது என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்
கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை (5) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது,
கட்சியின் நிர்வாக உறுப்பினர் ரேணுக பெரேராவின் கைது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
ரேணுக பெரேரா இனவாதியல்ல.இனவாதத்துக்கு எதிராக செயற்பட்ட ரேணுக பெரரோவையே நாம் அறிந்துள்ளோம்.1980 களில் மக்கள் விடுதலை முன்னணி இனவாதத்தை முன்னிலைப்படுத்தி மக்களை கொலை செய்யும் போது அதற்கு எதிராகவும் நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முன்னின்று செயற்பட்ட விஜயகுமாரதுங்கவின் அரசியல் கட்சியில் உறுப்பினராக செயற்பட்டவரே இந்த ரேணுக பெரேரா.அவ்வாறான ஒருவரை இந்த அரசாங்கம் கைது செய்வது அரசியல் பழிவாங்களாகவே நாம் பார்க்கிறோம். இது தமக்கு எதிராக செயற்படும் தரப்பினரை ஒடுக்கும் முயற்சியாகும்.
பாராளுமன்றத்தில் எத்தனையே எதிர்காட்சிகள் இருக்கின்றன. ஆனால் மக்கள் விடுதலை முன்னணி பொதுஜன பெரமுனவை குறி வைத்துள்ளது. இந்த அரசாங்கம் பொதுஜன பெரமுனவை கண்டு அச்சமடைந்துள்ளது.மாவீரர் தினம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை பிணையில் விடுதலை செய்யும் போது நீதிமன்றம் மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை கைது செய்ய வேண்டும் என கூறியிருந்தது. வடக்கில் பல பகுதிகளில் விடுதலை புலிகளை ஆதரித்து மாவீரர் தினம் கொண்டாடப்பட்டதாக சம்பந்தப்பட்ட அமைச்சரே பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.
எனவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையிலும் கூட அரசாங்கம் சட்டத்துக்கு மதிப்பளிக்காமல் அரசியல் பழிவாங்கலை செய்துள்ளமை இதன் ஊடாக தெளிவாகியுள்ளது.நாட்டு மக்களுக்கு பொய்க்கூறி அதிகாரத்துக்கு வந்த அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தற்போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் மக்களை திசை திருப்பவே இவ்வாறு கைதுகளை மேற்கொள்கிறது என்றார்.