விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (20) மதியம் அவர் நீதிமன்றத்திலிருந்து அழைத்து வரப்பட்டு, மகசீன் சிறைச்சாலையின் M2 அறையில் தடுத்து வைக்கப்பட்டார்.
முன்னாள் அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரும் அதே அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் கெஹலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, சிறைச்சாலை மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டார்.
நித்திரை கொள்ளும் போது சுவாசிப்பதில் சிரமம் உள்ளதாகவும், அந்த சந்தர்ப்பங்களில் மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரமித் ரம்புக்வெல்ல சிறையில் அடைக்கப்பட்டபோது, மகசீன் விளக்கமறியல் சிறைச்சாலைக்கு அதற்கான சாதனமும் கொண்டு வரப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அவருக்கு நித்திரை கொள்வதற்காக படுக்கையை வழங்கவும், சுவாசக் கோளாறு ஏற்பட்டால் உரிய சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் ரமித் மகசீன் சிறைச்சாலையிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.