பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபோதையில் வாகனம் செலுத்தியதன் காரணமாக அவர் நேற்று (06) கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் இதற்க்கு முன்னர் மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் இல்லத்திலிருந்து இலக்கத் தகடு இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ரத்வத்தே மற்றும் அவரது மனைவி கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது, கண்டியில் தற்கொலை செய்து கொண்ட தனது ஒருங்கிணைப்புச் செயலாளர், தனக்குத் தெரிவிக்காமல் காரை இல்லத்திற்குக் கொண்டு வந்ததாகவும், வாகனத்தின் உரிமையாளர் யார் என்பது தனக்குத் தெரியாது என்றும் லொஹான் ரத்வத்த கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக முதலில் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டதோடு, அவரது மனைவியும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டதை அடுத்து, தம்பதியினர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு நேற்று முன்தினம் (05) பிணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.