ஆசிய கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வா
நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை ஆசிய கிரிக்கெட் பேரவை (ACC) நேற்று (06) வெளியிட்ட அறிக்கையில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சம்மி சில்வா ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் நிதி மற்றும் சந்தைப்படுத்தல் குழுவின் தலைவர் பதவியில் பல ஆண்டுகள் பணியாற்றியிருந்த நிலையில், தற்போது கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைவராக பொறுப்பேற்ற பின் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ஆசிய கிரிக்கெட் சபைக்கு தலைமை தாங்குவது எனக்கு மிகப் பெரிய மரியாதையாகும்.
கிரிக்கெட் என்பது ஆசியாவின் இதயமாகும், மேலும் கிரிக்கெட்டை மேம்படுத்த, உருவாகும் திறமைகளுக்கு வாய்ப்புகளை வழங்க, மற்றும் இந்த அழகிய விளையாட்டின் மூலம் எங்களை ஒன்றிணைக்கும் உறவுகளை வலுப்படுத்த அனைத்து உறுப்பினர் நாடுகளுடனும் நெருக்கமாக பணியாற்ற விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக செயற்பட்டுவந்த இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜெய் ஷா, சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள நிலையில், சம்மி சில்வா குறித்த பதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.