மாவட்ட நீதவான் நீதிமன்றம் வாழைச்சேனையில் சான்றுப் பொருட்கள் வைக்குமிடத்தில் நேற்று செவ்வாய் கிழமை மாலையன்று (10) திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
பொலிஸ் உத்தியோகஸ்த்தர் மற்றும் நீதிமன்ற காவலாளி ஆகியோர்கள் கடமையில் இருந்த போது குறித்த வளாகத்தில் உள் நுழைந்த திருடன், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பின்னர் தப்பி ஓடியுள்ளதாக தெரிவித்தனர்.
பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையொன்றில் சத்தம் கேட்டதனை தொடர்ந்து சத்தம் கேட்ட அறையினை நோக்கி சென்ற காவலாளிகளை கண்டு திருடன் தப்பி ஓடியுள்ளான்.
இதன் போது அறையின் கதவு திறந்து காணப்பட்டுள்ளது. உடனே குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பதில் பொலிஸ் பரிசோதகரின் கவனத்திற்கு விடயத்தினை தெரியப்படுத்தியதனை அடுத்து நீதிமன்ற சான்றுப் பொருட்களுக்கான வளாக பொறுப்பதிகாரி வரவழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது அங்கு வைக்கப்பட்டிருந்த மதுபானபோத்தல்கள் அடங்கிய பெட்டிகள் சில திருடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர். குறித்த வளாகத்தில் முன்பும் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.