புதிய சபாநாயகரை அடுத்த நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளில் தெரிவு செய்ய வேண்டும் என நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் 17ஆம் திகதி புதிய சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது.
புதிதாகத் தெரிவு செய்யப்படவுள்ள சபாநாயகர் தொடர்பில் சர்ச்சை எழுந்தால் அன்றைய தினம் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
எதிர்வரும் 17ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்குக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
சபாநாயகர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக அசோக ரன்வெல நேற்று அறிவித்த நிலையில் புதிய சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது.
தமது கல்வித்தகைமைகளை உறுதிப்படுத்தும் வரையில் சபாநாயகர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் கலாநிதி பட்டம் பெற்ற ஜப்பான் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் குறித்த ஆவணங்களைப் பெறுவதில் தற்போது சிரமங்கள் இருப்பதாகவும் அவற்றை பெற்று விரைவில் வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தமது பட்டம் தொடர்பில் எழுந்துள்ள குழப்ப நிலையைக் கருத்திற் கொண்டும் அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பாதுகாக்கும் நோக்கிலும் தாம் சபாநாயகர் பதவியிலிருந்து விலகுவதாக அசோக ரன்வெல அறிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியலமைப்பிற்கு அமைய, 64 கீழ் 2ஆவது சரத்தின்படி, சபாநாயகர் ஒருவர் தமது பதவி விலகலை ஜனாதிபதிக்குக் கடிதம் மூலம் அறிவிக்க வேண்டும்.
அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதன் பின்னர் பதவி விலகல் நடைமுறைக்கு வரும் என நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.