கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயத்திணைக்களத்தின் உதவி ஆணையாளர் தேவரதன் பின்னணியில் நடைபெற்ற மோசடிகளை விவசாயி ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
விவசாயி ஒருவருக்கு சொந்தமான விவசாய பயிர் செய்கை காணியை இன்னொருவரின் பெயரில் முறைகேடான முறையில் விவசாயத்திணைக்களத்தால் மாற்றம் செய்த மோசடியொன்றையே அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட ஆனந்த நடராஜா செந்தூரன் என்ற நபர் யாழ் ஊடக அமையத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி தம்புகாமத்தில் எங்களுக்கு சொந்தமான காணியை எந்தவித ஆவணமும் இல்லாமல் உறுதி இல்லாமல் மாற்றிக் கொடுத்துள்ளார்கள். இறந்தவரின் பெயரில் பதிவு போடப்பட்டுள்ளது. மகிழங்காடு கமக்கார அமைப்பினர் தமக்கு தெரியாது என்கின்றனர்.
விவசாயம் செய்யப்படாத காணிகளுக்கு பசளை மானியம் என்பன வழங்கப்பட்டுள்ளது. 2019 முதல் குறித்த காணியில் பயிர் செய்கை செய்யும் எமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தில் நடந்த மோசடிகள் முழுமையாக அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
பொலிசாருக்கும் கிளிநொச்சி மாவட்ட விவசாய திணைக்களத்திற்கு முறையிட்டும் பலனில்லை.தேர்தலை காரணம் காட்டுகின்றார்கள் தேர்தலுக்கு பின்னர் விசாரிக்கின்றோம் என்கின்றனர்.
இது தொடர்பில் நான் வழக்கு தொடர தயாராக இருக்கின்றேன். ஆவண மோசடி சம்பந்தமாக மானஷ்ட வழக்கை போடவுள்ளேன். இதில் பாதிக்கப்பட்டது நாங்களே. நாங்கள் காணிக்குள் பயிர் செய்கையாளர்களாக இருக்கின்றோம்.
நமக்கு இந்த பசளையோ மானியமோ வழங்கப்படவில்லை. நமக்கு உரிமை மறுக்கப்பட்டிருக்கின்றது. சட்டம் சொல்கின்ற விடயம் எமக்கு மறுக்கப்பட்டுள்ளது. விவசாயத் திணைக்களத்தில் உள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாவிட்டால் அதை நீதிமன்றத்திடம் போடுங்கள்.
ஆனால் உதவி ஆணையாளர் மோசடியில் தொடர்புபட்டமையால் மூடிமறைக்கிறார். அதை நாங்கள் நீதிமன்றத்தின் ஊடாக செய்வோம். இதை செய்ய முடியாவிட்டால் வெளியேறுங்கள்.
இதை நாங்கள் கேட்கும் போது எமது குரல்வளை நசிக்கப்படுகிறது. இதை சொல்ல வேண்டியது எனது கடமை. இதைப்போல நிறைய பேர் கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்படுகின்றார்கள்.
தண்ணீர் ,பசளை எடுப்பது எனக்கு முக்கியம் இல்ல. இந்த ஊழல் அப்பட்டமானது. இது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளரிடம் முறையிட்டிருக்கின்றேன். விசாரணை நேர்மையாக நீதியாக நடைபெற்று இந்த ஊழல் வெளியில் கொண்டுவரப்பட வேண்டும்.
கீழ்மட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை மோசடிக்கு துணை போயிருக்கலாம். இது தொடர்பாக விசாரணை செய்யப்படவேண்டும் – என்றார்.