யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரத் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் மஹேன் கோபல்லவ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டுக் குழு முன்னிலையில் இன்று (17) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த மனுவை ஜனவரி 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உண்மைகளை உறுதிப்படுத்த நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடந்த பொதுத் தேர்தலின் போது அரச வைத்தியராகக் கடமையாற்றிய நிலையில், வேட்பு மனுவை சமர்ப்பித்ததாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச சேவையிலிருந்து விலகாமல் இவ்வாறு வேட்புமனு தாக்கல் செய்வது சட்டவிரோதமானது என சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், அது தேர்தல்கள் சட்ட விதிகளுக்கு முரணானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அரசியல் சாசனத்தின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் எனப் பிரகடனப்படுத்தி, அந்த ஆசனத்தை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி மனுதாரர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.