குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று (21) நாடாளுமன்றத்துக்குப் பிரவேசித்து மூன்று நாடாளுமன்ற அதிகாரிகளிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
நாடாளுமன்றத்தின் இணையத்தளத்தில் தமது பெயருக்கு முன்னதாக கலாநிதி என்ற பட்டம் இடப்பட்டிருந்தமை தொடர்பில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்திருந்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலத்தைப் பதிவு செய்திருந்துள்ளனர்.
இதேவேளை, குற்றப்புலனாய்வு திணைக்களத்தை, அரசியலுக்காகப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்ற அதிகாரிகளிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தலைமையில் சதிகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவின் கணவரான ஹரிகுப்த ரோஹனதீரவே கோட்டாபய ராஜபக்ஷவின் சட்ட ஆலோசகராகச் செயற்பட்டார்.
எனவே, இந்த சதியின் பின்னணியில் ராஜபக்ஷக்களே உள்ளனர் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரை கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பயமுறுத்தும் முயற்சிகள் இடம்பெறுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.