அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை.
ஆனால் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிடுவதற்கு ஒழுங்குமுறையொன்று பேணப்பட வேண்டும் என எண்ணுவதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் அனுமதியைப் பெற்றுக் கொண்ட பின்னரே ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிடவோ அல்லது நேர்காணல்களை வழங்கவோ அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து நேற்று செவ்வாய்கிழமை (24) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
எந்தவொரு அமைச்சருக்கும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை. சுதந்திரமாக அவர்களுக்கு கருத்துக்களை முன்வைக்க முடியும்.
ஆனால் இதனை ஏதேனுமொரு வகையில் ஒழுங்குபடுத்த வேண்டும் என்று எண்ணுகின்றோம். வாராந்தம் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெறுகிறது.
இதன் போது அமைச்சரவையில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் மற்றும் அமைச்சுக்களுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து கேள்வியெழுப்ப முடியும்.
மேலும் அமைச்சுக்களுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் பிரதி அமைச்சர்களிடமும், அமைச்சின் அதிகாரிகளிடமும் கேள்வியெழுப்ப முடியும்.
ஆனால் அரசாங்கத்தின் தீர்மானங்களை அறிவிக்கும் போது ஒரு ஒழுங்குமுறை பின்பற்றப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்றார்.