பருத்ததித்துறை பெண்கள் உயர்தர பாடசாலைக்கு வடமாகாண ஆளுநர் பி.எச்.எம். சாள்ஸ் கையெழுத்துடன் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் பாடசாலை அதிபரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பாடசாலையைச் சேர்ந்த ஐவரை பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் மாணவி ஒருவரை தரம் ஆறில் இணைக்குமாறு வட மாகாண ஆளுநரின் கையொப்பத்துடன் கடிதம் ஒன்று பருத்தித்துறைப் பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு அனுப்பப்பட்டது.
குறித்த கடிதமானது நிர்வாக நடைமுறைகளை மீறி நேரடியாக பாடசாலை அதிபருக்கு அனுப்பப்பட்ட நிலையில் குறித்த கடிதம் தொடர்பில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் தோன்றின.
குறித்த பாடசாலை மத்திய கல்வி அமைச்சின் கீழ் வருகின்ற நிலையில் மாணவர்களை இணைத்துக் கொள்ளும் வெட்டுப்புள்ளி தொடர்பில் மத்திய கல்வி அமைச்சு தீர்மானிக்க வேண்டும் என பதிலுக்கு அதிபர் வலையக் கல்விப் பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பினார்.
இவ்வாறான நிலையில் குறித்த கடிதம் அடங்கிய செய்தி ஒன்றை குறித்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தனது முகநூலில் பகிர்ந்துள்ளார் .
இந்நிலையில் பாடசாலைக்கு வந்த கடிதம் எவ்வாறு வெளியே சென்றது என சந்தேகம் அடைந்த அதிபர் குறித்த பாடசாலையின் இரண்டு பிரதி அதிபர்கள் உட்பட ஐந்து பேருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.\