சுனாமிப் பேரலை தாக்கி 20 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இலங்கையில் பாதிப்புற்ற அனைத்து பிரதேசங்களிலும் பாதிப்புற்றோர்களுக்கு நியாயமான அடிப்படையில் இழப்புகள் ஈடுசெய்யப்பட்டு விட்டது.
குறிப்பாக சுனாமி பாதுகாப்பு எல்லைக்குட்பட்டவர்களுக்கு அந்தந்த பிரதேசங்களில் பாதுகாப்பான இடங்களில் குடியிருப்புக்கான வீடமைப்புக்கள் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் அக்கரைப்பற்று பிரதேசத்தில் மாத்திரம் நுரைச்சோலை அரச காணியில் அமைக்கப்பட்ட வீடுகளை சுனாமியால் பாதிப்புற்று வீடுகள் முழுமையாக சேதமடைந்த மக்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என அக்கரைப்பற்றில் சுனாமியினால் பாதிப்புற்றோர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இன்று (15) கல்முனை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாட்டினை செய்வதற்கு வருகைதந்த பாதிப்புற்றோர் சங்கத் தலைவர் ஐ.எல்.ஏ. குத்தூஸ் கூறுகையில்,

15 வருடங்களுக்கு முன்னர் வீடமைப்பு அமைச்சராக இருந்த பேரியல் அஷ்ரஃப் அவர்களுடைய அயராத முயற்சியில் எங்களுக்காக சவுதி நாட்டு நிதியினைக் கொண்டுவந்து நிர்மாணித்து முடிக்கப்பட்ட இந்த வீடுகளை வழங்க ஆயத்தமானபோது. பேரினவாதங் கொண்ட சில இனவாதிகளாலும், இன்னும் சிலருடைய சுயநல அரசியல் இலாபங்களுக்காகவும் அக்கரைப்பற்று மக்களுக்கு இந்த வீடுகளை வழங்கக்கூடாது என திட்டமிட்டு தடுக்கப்பட்டது.
இதனை மேலும் தடை செய்ய சிலரால் உச்சநீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன், அதில் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வழங்கப்பட்ட தீர்ப்பு இருப்பதனால் வீடுகளை வழங்க முடியாதுள்ளது என மாவட்ட அரசாங்க அதிபர் முதல் உயர்மட்ட அதிகாரிகளும், மாறி மாறி ஆட்சி செய்த ஆட்சியாளர்களும் கூறி வருகின்றனர்.
புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று முதன் முதலில் கூறியது நுரைச்சோலை வீடுகள் பாதிப்புற்ற மக்களுக்கு உடனடியாக வழங்கப்படும் என்று, அவ்வாறு கூறி ஆறு மாதங்கள் தாண்டிவிட்டது.அவர்களும் அதைச் செய்யவில்லை.
இதற்கு தீர்வை யார்தான் வழங்குவார்கள் எனவும் கூறியுள்ளார்.
