யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்குள் புகுந்து, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காரைநகர் சாலை பேருந்தின் சாரதி மற்றும் யாழ். சாலை நடத்துனர் மீது தாக்குதலை நடத்தி தப்பியோடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்குள் நேற்றுமுன்தினம்(24) மாலை நுழைந்த இருவர் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்றையதினம்(25), அரச போக்குவரத்து துறையில் கடமையில் ஈடுபடும் யாழ் – காரைநகர் ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு செய்தனர். அத்துடன் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனுடனும் இது குறித்து கலந்துரையாடினர்.
இவ்வாறான பின்னணியில் இந்த சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கைகளை எடுக்குமாறு, கடற்றொழில் அமைச்சர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர் வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் பணிப் பகிஸ்கரிப்பு 1 மணிக்கு பின்னர் கைவிடப்பட்டது. இவ்வாறான சூழ்நிலையில் தாக்குதல் நடாத்திய ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றையவர் தலைமறைவாகியுள்ளார்.