திருகோணமலை கடற்பரப்பிலிருந்து ஆளில்லா விமானம் ஒன்று இயங்கக்கூடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளமை வடகிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒரு சாதாரண விடயம் என்றே பலருக்கு தோன்றினாலும் இந்த சம்பவத்தின் பின்னால் மிகப்பெரிய அரசியல் நகர்வு ஒன்று திட்டமிடப்படுவதாகவே எண்ணத்தோன்றுகிறது.
காரணம் இதற்கு மமுதல் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்த முப்படையினரை அநுர அரசு நீக்கிவிட்டு, பொலிசாரை நியமித்ததே.

அநுர அரசின் இந்த அறிவிப்பை வெளியிட்டு ஓரிரு நாட்களுக்குள் மொட்டு கட்சியின் பக்கத்திலிருந்து எதிர்ப்புகள் கிளப்பியிருந்தாலும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டுவந்தவருக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரால் ஆபத்து இருப்பதாகவும், தமீழீழ விடுதலைப்புலிகள் குழுக்களினால் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுஜன பெரமுன சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் மனோஜ் கமகே தெரிவித்திருந்ததுடன், மஹிந்த ராஜபக்ஸ மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பாதுகாப்பு நீக்கப்பட்ட விவகாரத்திற்கு நீதிமன்றம் செல்லப்போவதாகவும் மொட்டு அறிவித்திருந்த நிலையில் , அரச புலனாய்வுத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மீது ஆளில்லா விமானம் தாக்கும் அபாயம் இல்லை என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல நேற்று (26) மொட்டு கட்சியின் கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளியும் வைத்திருந்தார்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் நேற்று (26) தமிழர் தாயகத்தின் தலைநகரான திருகோணமலையின் கடற்பரப்பில் ஒரு ஆளில்லா விமானம் மீட்கப்பட்டமை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த ஆளில்லா விமானம் உண்மையில் கடலில் மிதந்து வந்ததா? அல்லது மிதந்து வர செய்யப்படதா? என்ற கேள்விகளுக்கு அப்பால் இந்த சம்பவத்தை வைத்து பொதுஜன பெரமுன மஹிந்தவுக்கு உயிர் ஆபத்து இருக்கின்றது என்ற விடயத்தை பெரும்பாண்மை மக்கள் மத்தில் நம்ப வைப்பதற்கும் ஏன் நீதி மன்ற வழக்குகளுக்கு இதை ஒரு ஆதாரமாக சமர்ப்பிக்கவும் வாய்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது என்ற கோணத்திலும் இது பார்க்கப்பட வேண்டியுள்ளது.
ஆளில்லா விமானம் உண்மையில் கடலில் மிதந்து வந்ததா? அல்லது மிதந்து வர செய்யப்படதா?
-மாயவன்-
