அஸ்வெசும பயனாளர் குடும்பத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கும், அஸ்வெசும கொடுப்பனவு பெறாது ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களின் மாணவர்களுக்கும் 6000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படும் என நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்துள்ளார்.
அத்துடன் கல்வி அமைச்சின் ஊடாக இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பிரதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ”பொருளாதார தாக்கத்தினால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொருளாதார மீட்சிக்கான திட்டங்களுடன் அவதானத்துக்குரிய தரப்பினருக்கு நிவாரணம் வழங்கும் திட்டங்கள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன.
பிள்ளைகளின் கல்வி மீதான சுமையை குறைப்பதற்கு அரசாங்கம் சிறந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதற்கமைய அஸ்வெசும பயனாளர்களின் குடும்பங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் பாடசாலை தவணையை முன்னிட்டு பாடசாலை கற்றல் உபகரணங்கள் பெற்றுக் கொள்வதற்கு 6000 ரூபா வழங்கப்படும்.
அதேபோல் அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்குள் உள்ளடங்காத ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களின் பாடசாலை மாணவர்களுக்கும் இந்த 6000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படும்.
கடந்த காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கு பாதணி வழங்குவதற்கு பின்பற்றப்பட்ட வழிமுறை இந்த திட்டத்திலும் செயற்படுத்தப்படும். கல்வி அமைச்சின் ஊடாக இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.