கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக இலங்கை நிருவாக சேவையின் தரம் i சிரேஷ்ட அதிகாரியான ஏ.எல்.எம். அஸ்மி, நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் சிரேஷ்ட பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று வெள்ளிக்கிழமை (27) இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளராக கடமையாற்றி வந்த நிலையில் அவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளராகவும் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளராகவும் பதிவாளராகவும் கல்முனை மாநகர சபை ஆணையாளராகவும் பதவி வகித்துள்ள அஸ்மி, குறித்த நிறுவனங்களை செயற்றிறன் மிக்கதாக கட்டியெழுப்பியிருந்தார்.
இவரது சேவைத் தரம், தகுதி மற்றும் உள்ளூராட்சி நிர்வாகத்தில் ஒரு தசாப்த கால அனுபவம் என்பவற்றின் அடிப்படையிலும் உள்ளூராட்சி நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு வழங்கி வந்த தலைமைத்துவ வழிகாட்டுதல்கள், நிர்வாக மற்றும் முகாமைத்துவ செயற்பாட்டு திறமைகள் என்பவற்றை கருத்தில் கொண்டு தற்போது கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.