(ஸ்ரீதேவி) நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது இல்லை இன்சூரன்ஸ் பணத்துக்காக கொல்லப்பட்டிருக்கிறார் என சினிமா மற்றும் அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் என்பவர் தெரிவித்திருக்கிறார்.
சிவகாசி அருகே மீனம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்த ஸ்ரீதேவி கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு துணைவன் படத்தில் அவர் முருகன் கதாபாத்திரம் ஏற்றிருந்தார். தொடர்ந்து தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக கலக்க தொடங்கினார்.
பாலசந்தர் படத்தில் அறிமுகம் குழந்தை நட்சத்திரமாக பல மொழிகளில் நடித்து பல விருதுகளை வென்ற அவர் கே.பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் அவர் நடித்த காயத்ரி படம் மூன்று முடிச்சுக்கு முன்னதாகவே ரிலீஸானதால் ஹீரோயினாக அவர் நடித்த முதல் படமாக காயத்ரி இருக்கிறது.
தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்த ஸ்ரீதேவிக்கு ஹீரோயினாக பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம். அதில் அவர் ஏற்றிருந்த மயில் கதாபாத்திரம் அப்போதைய ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து தென் இந்தியா முழுவதும் தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தினார் ஸ்ரீதேவி.
இதனையடுத்து பாலிவுட்டுக்கு சென்ற ஸ்ரீதேவி அங்கும் தனது அழகாலும், திறமையாலும் வெற்றிக்கொடியை நாட்டினார். பல வெற்றி படங்களில் நடித்த ஸ்ரீதேவியின் கால்ஷீட்டுக்காக ஒட்டுமொத்த பாலிவுட்டும் காத்திருக்க ஆரம்பித்தது. அந்த சமயத்தில் தயாரிப்பாளர் போனி கபூரை காதலிக்கத் தொடங்கினார். எடுத்ததும் திருமணம் செய்துகொள்ளாமல் சில காலம் லிவிங் டூ கெதரில் இருந்துவிட்டு பிறகு இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஜான்வி, குஷி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
தமிழில் அவர் கடைசியாக புலி படத்திலும் , ஹிந்தியில் மாம் என்ற படத்திலும் நடித்தார். இந்தச் சூழலில் கடந்த 2018ஆம் ஆண்டு துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அவர் ஹோட்டல் அறையில் இருக்கும் பாத் டாப்பில் உயிரிழந்து கிடந்தார். அவரது உயிரிழப்புக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் இரங்கல் தெரிவித்தது. அதேசமயம் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக சிலர் கூறவும் செய்தனர்.
இந்நிலையில் டாக்டர் காந்தராஜ் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டார் என தெரிவித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “ஸ்ரீதேவி பாத் டாப்பில் விழுந்து இறந்தார் என கூறுவது அப்பட்டமான பொய். அவரை பணத்துக்காகத்தான் போனி கபூர் திருமணமே செய்துகொண்டார். அவரது திருமணத்துக்கு எப்படி பணம் காரணமாக இருந்ததோ அதேபோல் அவரது மரணத்துக்கும் பணம்தான் முக்கிய காரணம்.
நடிகை ஸ்ரீதேவியின் பெயரில் 200 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணம் இருந்தது. அதை பெற வேண்டும் என்பதற்காகத்தான் அவர் கொல்லப்பட்டார். அந்த மரணத்துக்கு பின்னால் பல விஷயங்கள் இருக்கின்றன. நரேந்திர மோடிக்கு நெருக்கமாக இருந்ததால் போனி கபூர் இந்த விஷயத்திலிருந்து தப்பித்துவிட்டார்” என்றார். அவரது இந்தப் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இவர் ஸ்ரீதேவியின் குடும்ப நண்பர் என்றும் ஒரு தகவல் உலாவிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.