புதிய ஆண்டினை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டிருந்ததுடன், வானவேடிக்கைகளும் இடம்பெற்றன.
மட்டக்களப்பு நகரின் காந்திபூங்கா மற்றும் மணிக்கூண்டு கோபுரம் என்பன புத்தாண்டினை வரவேற்கும் வகையில் மின்விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்டு நகர் ஒளிமயமாக காட்சியளித்தது.
இதனை கண்டுகளிப்பதற்காகவும் நள்ளிரவு புதுவருட பிறப்பின்போது நடாத்தப்படும் வானவேடிக்கையினை கண்டுகளிப்பதற்காகவும் ஆயிரக்கணக்கான மக்கள் நகரில் ஒன்றுகூடியிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலுமிருந்து மட்டக்களப்பு நகருக்குள் நேற்று நள்ளிரவு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டதன் காரணமாக வீதியில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டது.
எனினும் மக்கள் புதிய ஆண்டினை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கவேண்டும் என்பதற்காக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் பாதுகாப்பினை பலப்படுத்தியிருந்ததுடன், போக்குவரத்துகளை இலகுபடுத்தும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தனர்.
புதிய ஆண்டில் மகிழ்ச்சியான ஆண்டாக அமைய இதன்போது மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் தெரிவித்துக்கொண்டதையும் காணமுடிந்தது.