மது போதையில் இரவு நேர சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குலானை பொலிஸார் தெரிவித்தனர்.
அங்குலானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 51 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் மேலும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் இணைந்து நேற்றைய தினம் பொலிஸ் முச்சக்கரவண்டியில் இரவு நேர சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்துள்ளார்.
பின்னர், இந்த முச்சக்கரவண்டி அங்குலானை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை அவதானித்த வேறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் முச்சக்கரவண்டியை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தரிடமிருந்து மதுபான போத்தல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, முச்சக்கரவண்டியில் இருந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பரிசோதனையில் சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் மது போதையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
பின்னர், சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குலானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.